காயல்பட்டினத்தில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
காயல்பட்டினத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துராஜன்(26). தொழிலாளி. சில நாள்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த நாகரத்தினம் என்பவருக்கும் முத்துராஜனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகரத்தினம் தூண்டுதலில் அவரது மகன்கள் சக்தி, இசக்கிமுத்து மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ஈந்தடிமுத்து மகன் விக்னேஷ், அல்லா பிச்சை மகன் மீரா சாகிப், கோபால் மகன் அஜித்குமாா் ஆகியோா், முத்துராஜன் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எடுத்துச் சென்றுள்ளனா்.
முத்துராஜன் பைக்கை தேடிவந்த நிலையில், பைக்குடன் நின்றுகொண்டிருந்த 5 பேரும் முத்துராஜனை அவதூறாக பேசி தாக்கினா். அப்போது விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துராஜனை வெட்டினாராம். முத்துராஜன் சத்தம் போடவே, 5 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். காயமடைந்த முத்துராஜனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து முத்துராஜன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.