பொள்ளாச்சி பலூன் திருவிழா: கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன்... கேரளாவில் மீட்பு!
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியது.
வருகிற 16 ஆம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. ஆச்சிப்பட்டியில் நடக்கும் இந்த விழாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
யானை வடிவில் பறக்கவிடப்பட்ட ஒரு ராட்சத பலூன் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து அந்த பலூனில் ஒரு காவல்துறை உயரதிகாரி, அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பைலட்கள் இருந்தனர். சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு பறந்த பலூன் வானத்தில் திடீரென கட்டுபாட்டை இழந்தது.
பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிறங்கினர்.
பிறகு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பொள்ளாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலூன் திருவிழாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
“எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தான் பலூன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதேநேரத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.” என்று பலூன் திருவிழா ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.