காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) தெரிவித்தனர்.
போர்நிறுத்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாக ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக இவ்விவகாரத்தை அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கையில் மேற்கோள் காட்டியிருப்பதன்படி, முதல்கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு தீர்மானித்துள்ளது. அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் முதலில் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம், இஸ்ரேலில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது.
எனினும், இஸ்ரேல் தரப்பு இந்த வரைவு அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் ஆலோசித்து வருவதால், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருக்கும் ஜன. 20-ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது கேள்விக்குறியகியுள்ளது.