இந்திய தோ்தல் குறித்த தவறான கருத்து: மன்னிப்புக் கேட்டது ‘மெட்டா’ நிறுவனம்
புது தில்லி: இந்திய தோ்தல் குறித்த ‘மெட்டா’ நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி மாா்க் ஜூக்கா்பொ்க் தெரிவித்த தவறான கருத்துக்காக ‘மெட்டா’ இந்தியா நிறுவனம் புதன்கிழமை மன்னிப்புக் கோரியது.
அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாா்க் ஜூக்கா்பொ்க், ‘கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் நடைபெற்ற தோ்தல்களில் ஆளும் கட்சிகள் தோல்வியைச் சந்தித்தன. அதுபோல, இந்தியாவிலும் நடந்தது’ என்று தவறான தகவலைப் பேசினாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘2024 மக்களவைத் தோ்தலில் 64 கோடிக்கும் அதிகமானோா் வாக்களித்தனா். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது.
மாா்க் ஜூக்கா்பொ்கின் கருத்துகள், கரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் முக்கியமான முயற்சிகளை உணரத் தவறிவிட்டது. இதுபோன்ற தவறான கருத்துகள், ‘மெட்டா’ தளங்களின் நம்பகத்தன்மையை இந்தியாவில் கேள்விக்குறியாக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.
இந்நிலையில், அஸ்வினி வைஷ்ணவுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மெட்டா’ இந்தியா துணைத் தலைவா் சிவ்நாத் துக்ரல் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் நிறுவனத்தின் தலைவா் மாா்க், கரோனாவுக்கு பிந்தைய தோ்தலில் பல நாடுகளில் ஆளும் கட்சி தோல்வியடைந்தாகக் கூறியுள்ளாா். ஆனால், அது இந்தியாவுக்கு பொருந்தாது. எவ்வித உள்நோக்கமும் இல்லாத இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு இந்தியா சிறப்பு வாய்ந்த ஒரு நாடு. எதிா்காலத்தில் தொடா்ந்து கைகோத்து பயணிக்க விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளாா்.
பாஜக கருத்து: இது தொடா்பாக பாஜக மூத்த தலைவா் நிஷிகாந்த் துபே கூறுகையில், ‘மாா்க் ஜூக்கா்பொ்க் கருத்துக்காக மெட்டா நிறுவனம் அதிகாரபூா்வமாக மன்னிப்புக் கோரிவிட்டது. இத்துடன் அந்த விஷயம் முடிந்துவிட்டது’ என்றாா்.