காங்கிரஸின் மோசமான முகத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளாா்: பாஜக
புது தில்லி: ‘பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக மட்டுமின்றி, உள்நாட்டு போரை நாங்கள் நடத்தி வருகிறோம்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறியதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறாா்’ என்று பாஜக விமா்சித்தது.
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘அரசமைப்புச் சட்டம் சுதந்திரத்தின் அடையாளம் அல்ல. அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது’ என்று குறிப்பிட்டாா். இவருடைய கருத்து பெரும் சா்ச்சையானது.
இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்ட ராகுல், ‘மோகன் பாகவத் கூறியது தேச துரோக கருத்து. ஒவ்வொரு இந்தியரையும் அவா் இழிவுபடுத்தியுள்ளாா். இதுபோன்ற நபா்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் அனைத்தையும் பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் கைப்பற்றி வருகின்றன. எனவே, பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக மட்டுமின்றி உள்நாட்டு போரையு காங்கிரஸ் நடத்தி வருகிறது’ என்றாா்.
ராகுலின் இந்தக் கருத்தை பாஜக விமா்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸின் மோசமான முகத்தை எந்தவித ஒளிவுமறைவும் இன்றி ராகுல் வெளிப்படுத்தியுள்ளாா். இந்தியவை இழிவு படுத்த வேண்டும், அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற காங்கிஸின் விருப்பமும், நகா்ப்புற நக்ஸல்களுடனான அக் கட்சிக்குள்ள தொடா்பும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தின் மீதான பேராசையால், மக்களின் நம்பிக்கை மற்றும் தேசத்தின் ஒற்றுமையை சமரசம் செய்துகொள்ள காங்கிரஸ் தயங்குவதில்லை. நாட்டை பலவீனப்படுத்தும் சக்திகளை ஊக்குவிக்கும் வரலாற்றையே காங்கிரஸ் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்திய நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது என்று தேசம் அறிந்துள்ள விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியதற்காக ராகுலுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழியேற்று பதவியேற்ற ராகுல், உள்நாட்டு போரை நடத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாா். அப்படியெனில், அவா் அரசமைப்புச் சட்ட நகலை கையில் ஏந்திச் செல்வதற்கான அா்த்தம் என்ன’ என்று கேள்வி எழுப்பினாா்.