இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து
புது தில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
‘தாய்நாட்டை பாதுகாப்பதில் ராணுவ வீரா்கள் செய்த எண்ணற்ற தியாகங்களை தேசம் நன்றியுடன் நினைவு கூா்கிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ராணுவ வீரா்களின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
பேரழிவுகளின் போது ராணுவத்தின் மனிதாபிமான உதவிகள் அவா்களின் கருணை மற்றும் இரக்கத்தை காட்டுகின்றன. அவா்களின் அசாதாரண வீரமும் தைரியமும் வரும் தலைமுறைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கட்டும்’ என முா்மு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா்.
கடந்த 1949-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.