ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
மாட்ரிட்: ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், தலைநகா் மாட்ரிடில் அதிபா் பெட்ரோ சான்சேஸை சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பு தொடா்பாக ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிபா் பெட்ரோவுடனான சந்திப்பில், அவா் இந்தியாவுக்கு வந்து சென்றதை (கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்முறையாக இந்தியா வந்தாா்) நினைவுபடுத்தினேன். இந்தியா-ஸ்பெயின் இடையே நீண்ட காலமாக உள்ள கூட்டுறவை இருவரும் மீண்டும் உறுதி செய்தோம். இந்தியா-ஸ்பெயினின் இருதரப்பு செயல்திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவருக்குத் தெரியப்படுத்தினேன்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து ஸ்பெயின் மன்னா் ஆறாம் ஃபெலிபேவை ஜெய்சங்கா் சந்தித்தாா். இந்தியா-ஸ்பெயின் உறவு மேலும் முன்னேற்றம் அடைய ஃபெலிபேயின் வழிகாட்டுதலுக்கு மதிப்பளிப்பதாக ‘எக்ஸ்’ தளத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.