முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய வெப்பம் இன்னமும் தணியவில்லை. அதற்குள் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அதை மூடி மறைக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வந்த புதுச்சேரி பொறியியல் கல்லூரி (Pondicherry Engineering collage), சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக (Puducherry Technical University) தரம் உயர்த்தப்பட்டது.
புதுச்சேரி மாணவர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்கும் பயின்று வருகின்றனர். சுமார் 2,500 பேர் படித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தினுள் கடந்த 11-ம் தேதி சனிக்கிழமை மாலை நுழைந்த வெளி நபர்கள் சிலர், பல்கலை மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அதையடுத்து நாம் காலாப்பட்டு போலீஸாரை தொடர்பு கொண்டபோது, எங்களுக்கு அப்படி எந்த புகாரும் வரவில்லை என்று கூறியதால், நாம் நேரடியாக விசாரணையில் இறங்கினோம்.
பல்கலைக்கழக மாணவிகள் சிலரை அணுகியபோது தயங்கித் தயங்கி நம்மிடம் பேசினார்கள். ``புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்தான் இந்தப் பல்கலையின் வேந்தர். பேராசிரியர் மோகன்தான் துணைவேந்தர். ஆனால் எதன் அடிப்படையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார், எப்படி அந்த பணியில் தொடர்கிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் விடுதிகள் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகிறோம். ஆனால் மாணவர்களை தவிர உள்ளூர் இளைஞர்களும், குற்றப் பின்னணி கொண்ட ரௌடிகளும் பல்கலை வளாகத்தில் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அத்துடன் சிகரெட் புகைத்துக் கொண்டு மது குடித்துக் கொண்டிருப்பார்கள். இதுகுறித்து எங்கள் பேராசிரியர்களிடம் கூறினால், `அவர்களெல்லாம் இந்த கல்லூரிக்கு நிலம் வழங்கியவர்கள். தவிர உள்ளூர் ரௌடிகளிடம் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று கூறிவிடுகிறார்கள். சம்பவம் நடந்த 11-ம் தேதி மாலை 5 மணிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த விடுதி மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு வெளி நபர்கள், அவர்கள் இருவரையும் பார்த்து தவறான வார்த்தைகளால் கமெண்ட் செய்தார்கள்.
அப்போது அந்த மாணவியுடன் இருந்த மாணவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்கள் ஆபாச வார்த்தைகளில் கொச்சையாக பேசியதால், `நீங்கள் யார் எங்களைப் பற்றிப் பேச?’ என்று கேட்டிருக்கிறார் அந்த மாணவர். அதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நான்கு பேரும் சேர்ந்து அந்த மாணவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். நிலைமை மோசமானதாலும், பிரச்னை செய்பவர்கள் வெளிநபர்கள் என்பதாலும் அந்த மாணவி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த செல்போனை தட்டிவிட்ட அந்த நபர்கள், மாணவியையும் தாக்கியிருக்கிறார்கள். அதில் அவர் கூச்சலிட, உடனே அந்த நான்கு பேரும் அங்கிருந்து வண்டியை எடுத்துக்கிட்டு வேகமா போயிட்டாங்க. இந்தப் பிரச்னை குறித்து அப்போதே துணைவேந்தர் மோகனிடம் நாங்கள் தகவல் சொன்னோம்.
கண்டுகொள்ளப்படாத புகார்...
ஆனால் அவர் அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல், நீங்க ஏன் அங்க போய் பேசிக்கிட்டிருந்தீங்கனு சொல்லி அனுப்பிட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு பாதுகாப்பே இல்லை” என்று குமுறினர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் கசிய ஆரம்பித்ததும், `11-01-2025 அன்று மாலை 5 மணியளவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் இளைஞர்கள், இரண்டு பைக்குகளில் எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டதால், வளாகத்தில் பரபரப்பு மற்றும் தொந்தரவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் பல்கலைக்கழக கூடத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, உரிய சட்ட விதிகளின் கீழ், அத்துமீறுபவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு” காவல் துறையினரிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் மாண்பு மற்றும் நன்மதிப்பையும், மாணவர்களின் இறையாண்மையையும் பாதிக்கும் வகையில் தவறான செய்திகளையும், தவல்களையும் பரப்ப வேண்டாம் என்றும், பிரசுரிக்க வேண்டாம் என்றும் ஒளிபரப்ப வேண்டாம் என்றும் தங்களின் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது’ என்று பத்திரிகை செய்தியை வெளியிட்டிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.
இதுகுறித்து சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி கலைவாணனிடம் கேட்டபோது, ``பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலோ அல்லது பல்கலைக்கழக தரப்பிலோ போலீஸுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஆனாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நாங்கள் விசாரணையை மேற்கொண்டிருக்கிறோம். முதல் கட்ட விசாரணையில் பாலியல் அத்துமீறல் எதுவும் அங்கு நடைபெறவில்லை. வெளிநபர்கள் மாணவர்களிடம் வாக்குவாதத்திலும் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்கள். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார் சிலர், ``இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் புகார் கூறியும், பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் சென்று கேட்டபோதுதான், `பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை.
வெளிநபர்கள் வந்து மாணவர்களை மிரட்டியிருக்கிறார்கள். அதுகுறித்து மட்டும் புகார் அளிக்கிறோம்’ என்றனர் துணைவேந்தர் தரப்பில்” என்கிறார்கள். அதையடுத்து 14-ம் தேதி மாலைதான், `பல்கலை வளாகத்தில் நுழைந்த வெளிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மட்டும் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இதுகுறித்து விளக்கம் கேட்க பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனை அவரது செல்போன் எண்ணில் அழைத்தோம்.
ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்காததால், அவர் மீதான குற்றச்சாட்டை அவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இப்படி ஒரு சென்சிடிவான சம்பவத்தை மேலோட்டமாக பல்கலைக்கழக நிர்வாகம் கையாண்டு இருப்பது, அங்கு படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மேலும் 11-ம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு 14-ம் தேதி மாலை சாவகாசமாக புகார் கொடுத்திருப்பதில் பல்கலைக்கழகத்தின் மெத்தனம் வெளிப்பட்டிருக்கிறது என வேதனை தெரிவிக்கிறார்கள் மாணவர்கள் பெற்றோர்களும்.