மூடுபனியால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்! 100 ஆடுகள் பலி! 3 பேர் படுகாயம்!
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு
இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 5 ஆயிரம் ஆக இருந்த பரிசுத்தொகை தற்போது 5 மடங்கு உயர்த்தி ரூ. 25 ஆயிரமாக வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நாக்பூரில் நடிகர் அனுபம் கேருடன் அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அந்த நிகழ்வின்போது அவர் பேசியதாவது,
சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (ஒரு மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய உயிரைக் காப்பற்ற முடியும். இத்தகைய பணியைச் செய்பவர்களுக்கு வெகுமதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால் இந்தத் தொகையை 5 மடங்கு, ரூ.25 ஆயிரம் உயர்த்த சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாநில நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கும் பொருந்தும். பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான இந்த வெகுமதி திட்டம் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது.
பணம், வெகுமதியை எதிர்பார்க்காமல் விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தானாக முன்வந்து முதலுதவி செய்வது, உடனடி சிகிச்சை கிடைக்க உதவி செய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று அவர் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் உண்மையான நபர்களுக்குப் பரிசு வழங்குவதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக விபத்தில் காப்பாற்றிய நபர் குறித்து உண்மைத்தன்மையைக் கண்டறிந்த பின்னரே வெகுமதி வழங்கப்படுகிறது.