Maha Kumbh Mela 2025: நாக சந்நியாசியாக மாறும் 12000 துறவிகள்... கவனத்தை ஈர்த்த ஐ.ஐ.டி பாபா..!
Maha Kumbh Mela 2025:
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவில் இது வரை 5 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். தொடர்ந்து புனித நீராடி வருகின்றனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான சாதுக்கள் கும்பமேளாவில் குவிந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படும் இக்கும்பமேளாவில் புதிதாக 12 ஆயிரம் நாகநந்நியாசிகள் உருவாக்கப்பட இருக்கின்றனர். இந்த கும்பமேளாவிற்கு ஆயிரக்கணக்கான நாகநந்நியாசிகள் வந்துள்ளனர். அவர்கள் ஆடைகள் இன்றி இருக்கின்றனர். அதோடு புதிதாக இந்த கும்பமேளாவில் 12 ஆயிரம் சாதுக்கள் நாகசந்நியாசியாக மாற்றப்பட இருக்கின்றனர்.
இந்த நாகசந்நியாசிகளுக்காக பல அமைப்புகள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் மூலம் 12 ஆயிரம் பேர் புதிய நாகசந்நியாசிகளாக மாற்றப்பட இருக்கின்றனர். இது குறித்து அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மகேந்திர பூரி கூறுகையில், ''எங்கள் அமைப்பில் இருந்து இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் நாகசந்நியாசிகளாக மாற்றப்படுகின்றனர். சரியான பூஜைக்கு பிறகு மெளனி அமாவாசையன்று அவர்கள் நாகசந்நியாக மாற்றப்படுவர்'' என்றார்.
நாகசந்நியாசியாக மாற...
சாதாரண துறவி நாகசந்நியாசியாக மாறவேண்டுமானால் அவரது துறவு வாழ்க்கையை 12 ஆண்டுகள் கண்காணிக்கின்றனர். அதில் வெற்றி பெற்றால் மட்டுமே அவரை நாகசந்நியாசியாக மாற்றுகின்றனர். நாகசந்நியாகும் தினத்தில் முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட துறவி தனது குருவின் முன்பு அமர்ந்து நள்ளிரவு பூஜை செய்கிறார். அதனைத் தொடர்ந்து, கங்கையாற்றில் 108 முறை மூழ்கி எழும்பவேண்டும். அடுத்து, அவரது ஜடையில் பாதி வெட்டி எடுக்கப்படும். அதன் பிறகு தவம் செய்வதற்காக அவரை காட்டுக்குள் அனுப்பி விடுவார்கள். அருகில் காடு இல்லாத காரணத்தால் முகாமில் இருந்து வெளியேற்றிவிடுவர்.
மூன்றாவது நாள் ஆடை இல்லாமல் நாக சந்நியாசியாக வருவார்கள். வந்தவுடன் தங்களது குருவிற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுப்பார்கள். அதனை குரு ஏற்றுக்கொண்டால் மேற்கொண்டு செல்லலாம் என்று அர்த்தமாகும். அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு புதிய நாகசந்நியாசிக்கு அவரது குரு ஜடையை வெட்டிவிட்டு மற்ற நாக சந்நியாசிகளுடன் கங்கையில் புனித நீராட அனுப்பி வைப்பார். அதில் அதிகாலை 4 மணிக்கு புனித நீராட வேண்டும்.
ஐ.ஐ.டிபாபா
கும்பமேளாவில் ஐ.ஐ.டி பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஹரியானாவைச் சேர்ந்த அபய் சிங் என்ற பாபா மும்பை ஐ.ஐ.டியில் படித்து முடித்தவர். அவர் எஞ்சினியர் பாபா என்றும் அழைக்கப்படுகிறார். ஏரோஸ்பேஸ் பிரிவில் எஞ்சினியரிங் முடித்துள்ள அபய் சிங், படிப்பு முடிந்த பிறகு மும்பையில் 4 ஆண்டுகள் இருந்துள்ளார். கேம்பஸ் இண்டர்வியூ மூலம் கார்ப்ரேட் கம்பெனி வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட அபய் சிங் சில ஆண்டுகள் வேலை செய்தார். அதன் பிறகு போட்டோகிராபில் ஆர்வம் கொண்ட அபய் சிங் படிப்படியான தனது கவனத்தை அதில் திருப்பினார். போட்டோ எடுப்பதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதோடு கோச்சிங் கிளாஸ்களையும் தொடங்கி மாணவர்களுக்கு இயற்பியல் கற்றுக்கொடுத்து வந்தார். அதில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனதால் ஆன்மீகத்தின் பக்கம் சாய ஆரம்பித்தார்.
ஆன்மீகத்தில் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ள முழுமையாக தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். இப்போது முழுமையாக ஆன்மீகவாதியாக மாறிவிட்ட அபய் சிங் தன்னை சிவபக்தனாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். இது குறித்து அபய் சிங் கூறுகையில்,''ஆன்மீகத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். அறிவியல் மூலம் ஆன்மீகத்தை அடைய முடியும் என்பதை புரிந்து கொண்டேன். ஆன்மீகத்தின் ஆழமான பகுதிக்குச் செல்கிறேன். அனைத்தும் சிவன். சிவனே உண்மை''என்றார். பத்திரிகையாளர்களிடம் சரளமாக ஆங்கிலத்தில் அபய் சிங் பேசியதை பார்த்து அருகில் நின்ற சாதுக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.