டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் ...
நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா... தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!
நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் .
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.
ஐயப்பன் கோவிலில் 61 -ம் ஆண்டு விளக்குத் திருவிழா மற்றும் கோயில் குடமுழுக்கு திருவிழாவும் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தந்திரிகள் தலைமையில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில் 108 கலசங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுரத்தில் தெளிக்கப்பட்டது. புனித நீரில் நனைந்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற ஐயப்பன் விளக்குத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக வந்து வழிபட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழா ஊர்வலத்தில் செண்டை மேளங்கள் முழங்க புலி வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பனை ஆயிரக்கணக்கான மக்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவிழாவை முன்னிட்டு மஞ்சூர் நகரமே விழாக்கோலம் பூண்டதுடன் சந்நிதானம் முழுவதும் விளக்கொளியால் ஜொலித்தது. அன்னதானம் முதல் திருவிழா பூஜை வரை கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.