Big Boss 8: DAY 99; மோதிரத்தை திருப்பித் தந்த விஷால்... முட்டிக்கொண்ட ரவி - தர்ஷ...
ரூ.50 டு ரூ.500; பொங்கல் பானை, வாட்டர் பாட்டில் இன்னும் பல... மண்பாண்ட தொழில் ஸ்பாட் விசிட்!
பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான்! பொங்கலுக்கு விடுமுறை ஒருபுறம், விருந்தினர்கள் மறுபுறம் என வீடு விசேஷமாக காட்சியளிக்கும். புத்தாடை உடுத்தி, குலதெய்வ கோயிலுக்குச் சென்று, பொங்கல் பானை வைத்து, படையல் போட்டு, `பொங்கலோ... பொங்கல்!' என குடும்பத்தோடும் உற்றார் உறவினர்களுடனும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தைத்திருநாளில் கிடைக்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இத்தனை சிறப்பு கொண்ட பொங்கல் திருநாளுக்கு அழகு சேர்ப்பவற்றில் பானைக்கும், கரும்புக்கும் தனி இடம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், அகரம் பகுதியில் விறுவிறுப்பாக பானைகள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஆவலுடன் அந்த இடத்துக்கு விசிட் அடித்தோம்.
ஆண்கள், சக்கரத்தில் மண்பாண்டங்களை உருவாக்க... பெண்கள் மரக்கட்டையில் தட்டித் தட்டி பானைகளுக்கு வடிவம் கொடுப்பதோடு வெயிலில் செய்த பானைகளை காயவைத்து கொண்டிருக்கிறார்கள். மண்பாண்டங்கள் செய்வது குறித்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், மண்பாண்ட தொழிலாளர் சிவஞானம். ``மண்பாண்டங்களை உருவாக்குவது எங்களது குல தொழில். தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலைத்தான் செய்து வருகிறோம். நான் 50 வருடங்களாக மண்பாண்டம் செய்கிறேன். இங்கு மூன்று தெருக்களில் இருக்கும் 100 குடும்பங்களுக்கும் மேல் மண்பாண்ட தொழிலைச் செய்து வருகிறார்கள். நாங்கள் பானை, சட்டி , வாணல், பூந்தொட்டி, தண்ணீர் பாட்டில், ஜக்கு ,நோன்பு சட்டி, அகல் விளக்கு, பவுல், டின்னர் செட் போன்றவை பல டிசைன்களில் மக்களுக்கு பிடித்தவாறு செய்து தருகிறோம். எங்களிடம் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பானைகள் உள்ளது. வெயில் நாட்களில் 1000 முதல் 1500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோம். மழை நாட்களில் 500 முதல் 700 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோம். நாங்கள் செய்த பானைகள் மற்றும் இதர பொருட்கள் விழுப்புரம் சுற்றி வட்டாரத்திலும் கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்" என பானை செய்து கொண்டே கூறினார்.
மண்பாண்ட தொழில் குறித்து நம்மிடம் பேசிய செந்தில், ``மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் எங்கள் ரத்தத்திலேயே ஊறி போனது. மண்பாண்டம் தயாரிப்பதனை காலம் காலமாக செய்து வருகிறோம். சீசனுக்கு ஏற்ப விதவிதமாக செய்வோம். பொங்கல் பண்டிகைக்கு பானை, சட்டி, டைனிங் செட் போன்றவையும், கோடை காலங்களில் பானை, வாட்டர் பாட்டில் ,tap போட்ட பானை, டிசைனர் பானை போன்றவையும், விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகளும், கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகளும், செய்வது வழக்கம்.
எங்கள் பொருட்களில் டிசைன்களும் ஃபினிஷிங்கும் நன்றாக இருக்கும். கயிற்றில் சக்கரத்தை சுற்றி தான் முதலில் மண் பாண்டங்களைச் செய்தோம். தற்பொழுது நவீன மோட்டார்கள் பொருத்திய மெஷின் சக்கரங்களை வைத்து செய்கிறோம். ஒரு நாளில் 500க்கும் மேற்பட்ட பானைகளை செய்வோம். நன்கு வெயலில் காயவைத்து விற்பனை செய்வோம். பானை செய்த பிறகு வெயிலில் காய வைப்போம். பின்பு காவி மண்ணை தண்ணீரில் கலக்கி பானை மேல் நிறத்திற்காக தடவுவோம், அதற்கு பிறகு காயவைத்த தனை சூளை போடுவோம். நன்கு தீயில் போட்ட பின் மறுநாள் சூளையிலிருந்து வெளியில் எடுப்போம், பின்பு விற்பனைக்கு அனுப்புவோம். இவற்றில் நிறைய பானைகள் உடைந்து போகும். நாங்கள் செய்யும் பொருட்கள் மிக உறுதியாகவும் வலிமையாகவும் இருக்கும். நாங்கள் குடும்பமாக சேர்ந்துதான் இந்த வேலையை செய்கிறோம். ஒரு மாதத்திற்கு 25,000 முதல் 30,000 வரை வருமானம் ஈட்டுவோம். சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, நாமக்கல், செஞ்சி மற்றும் விழுப்புரம் சுற்றுவட்டாரத்திலும் பானைகளை அனுப்பி வைக்கிறோம். ஒரு பானை செய்ய குறைந்தது ஒரு வாரம் ஆகும். நன்றாக பானையை தட்டி பார்த்து வாங்க வேண்டும்" என்றார்.