”பேச்சில் இரட்டை அர்த்தங்கள் இல்லை எனச் சொல்ல முடியாது” ஹனி ரோஸ் வழக்கில் பாபி செம்மனூருக்கு ஜாமீன்!
மலையாள நடிகை ஹனி ரோஸின் பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாபி செம்மனூருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாபி செம்மனூர் தன்னைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாக ஆபாசப் பதிவுகள் மூலம் கலங்கம் ஏற்படுத்தியதாக நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் நகைக்கடைத் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது தன்னை அவமதிக்கும் வகையில் அநாகரிகமாக பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அவருடைய பேச்சுக்கு அவை நாகரிகம் கருதி தான் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாபி செம்மனூர் கைது செய்யப்பட்ட நிலையில், தான் கூறியதில் எந்த இரட்டை அர்த்தங்களும் இல்லை என பாபி தெரிவித்திருந்தார். எனினும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது பேச்சுக்களும், பதிவுகளும் இரட்டை அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகவே அமைந்துள்ளதாக தெரிவித்தது.
பாபி செம்மனூருக்கு ஜாமீன் அளிப்பது இதுபோன்ற குற்றச் செயல்களை ஊக்கிவிப்பதாக அமையலாம் என்ற வாதங்களுக்கு இடையே, பாபி செம்மனூரைக் கைது செய்ததே இதுபோன்ற செயல்களுக்கான எதிர்ப்பை சமூகத்திடம் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கருதுவதாகக் கூறியுள்ளது.
மேலும் தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) ஒப்படைத்துள்ள பாபி செம்மனூர் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.