மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி தமிழக அரசு சொன்னது என்ன? தெற்கு ரயில்வே
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
அதன்படி, நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்ட நிலையில், பாலமேட்டில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 7.40 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பொது மகாலிங்கம் மடத்து சாமி கோயில் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. பின்னர், முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் கோயில்காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.