ஒடிசா: யானை தாக்கியதில் பலியான பெண்! பொதுமக்கள் போராட்டம்!
ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.
தியோகார் மாவட்டத்தில் கடந்த ஜன. 13 அன்று இரவு குந்தெய்கோலா வனப்பகுதியிலிருந்து சங்காபாஸி கிராமத்தினுள் புகுந்த இரண்டு காட்டுயானைகள் குனி பெஹரா (வயது 50) என்ற பெண்ணின் வீட்டிற்கு பின்னால் இருந்த சோளத் தோட்டத்தை நாசம் செய்துள்ளன. இதனால், அந்த பெண்ணின் வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகள் மிரண்டு சத்தம் எழுப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தனது வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருந்த மாட்டை காப்பாற்ற அவர் சென்றபோது அங்கிருந்த யானை ஒன்று அவரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குல் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதையும் படிக்க:ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து, அங்கு விரைந்த குந்தெய்கோலா வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டினர்.
இந்நிலையில், நேற்று (ஜன.14) வனத்துறையினரின் அலட்சியப் போக்கே அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்றும் பலியான பெண்ணின் உறவினர்களுக்கு உரிய நிவாரணமும், வேலையும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை 53 மறித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அந்த யானைக்கு மயக்கமருந்து செலுத்தி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து கொண்டு சென்று வேறொரு வனப்பகுதிக்குள் விடவேண்டும் எனவும் அந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நீடித்த அந்த போராட்டம், வனத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.