கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே தடம்புரண்டது.
விழுப்புரம் அருகே புதுச்சேரி நோக்கிச் சென்ற மெமு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. லோகோ பைலட் அதைக் கவனித்து விரைவாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமார் 3 மணி நேரப் போராடத்துக்குப் பின்னர் சீரமைக்கப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
விசாரணை முடிந்த பின்னரே தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என்றும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விழுப்புரம்-புதுச்சேரி ரயில், காலை 5.25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு வளைவுப் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பெட்டி தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால் விழுப்புரம் பாதையில் காலை 8.30 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விழுப்புரம்-புதுச்சேரி மெமு என்பது சுமார் 38 கி.மீ. தூரம் மட்டுமே செல்லும் குறுகிய தூர ரயிலாகும்.
தண்டவாளத்தில் ரயில் சக்கரங்கள் இறக்கிய விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா என விழுப்புரம் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.