தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தாடைகள் உடுத்தி, பானையில் பொங்கலிட்டு தைத் திருநாளை கொண்டாடிவருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி தமிழக எல்லையொட்டியுள்ள தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்களும் முக்கியத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.