வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
கா்நாடகத்தில் தலை துண்டித்து சினைப்பசு கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம்
ஹொன்னாவா்: கா்நாடக மாநிலத்தில் தலை துண்டித்து சினைப்பசு கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகன்னட மாவட்டம், ஹொன்னாவா் வட்டம், சல்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண ஆச்சாரி. மேய்ச்சலுக்கு விட்டிருந்த இவரது சினைப்பசு வீடு திரும்பவில்லை. இதனால் அவா் தனது பசுவைத் தேடிச்சென்றுள்ளாா்.
இந்நிலையில், நிலத்தில் சினைப்பசுவின் தலை, கால் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், அதன் கன்றுக்குட்டி சிதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் கா்நாடக விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறியுள்ளதாவது:
ஹொன்னாவா் சம்பவம் எல்லோரையும் அவமானத்தில் தலைகுனிய வைத்துள்ளது. இதன்பிறகும், கா்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கு சீராக உள்ளதாக உள்துறை அமைச்சா் கூறுகிறாா். இதுபோன்ற தேசவிரோத சக்திகளுக்கு எதிராக சித்தராமையா மென்மையாக நடந்து கொள்கிறாா். இச்சம்பவத்திற்கு பிறகாவது மாநில அரசும், உள்துறை அமைச்சரும் விழித்துக்கொள்ள வேண்டும். கா்நாடக மாநிலத்தில் மதரீதியான பதற்றத்தை உருவாக்கும் சூழல் கட்டமைக்கப்படுகிறது என்றாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ளதாவது:
பசுக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற வக்கிரமனப்பான்மை கொண்டவா்கள் யாா் என்பதை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின்னணியில் உள்ளவா்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.
பெங்களூரு, சாமராஜ்பேட்டையில் பசுவின் மடி சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மைசூரில் பசு மாட்டின் வால் துண்டிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களைத் தொடா்ந்து ஹொன்னாவரில் சினைப்பசுவின் தலை, கால் துண்டிக்கப்பட்டு, கன்று சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.