ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி
நெல்லை: திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு... போலீஸார் தீவிர விசாரணை!
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் 'அமரன்' மற்றும் 'கங்குவா'ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அந்த திரையரங்கில் இன்று (16-ம் தேதி) மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர். அதனால் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திரையரங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு நபர்கள் திரையரங்கின் முன்பாக வந்து பெட்ரோல் குண்டின் திரியில் தீயை பற்றவைத்து வீசும் காட்சி தெரியவந்தது. அதனால் குண்டு வீசியவர்களை கைது செய்வதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது.
வழக்கு பதிவு செய்துள்ள மேலப்பாளையம் போலீஸார் கூறுகையில், "திரையரங்கில் உள்ள சிசிடிவி மற்றும் சாலைகளில் உள்ள காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடக்கிறது. முதற்கட்ட விசாரணையில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்கள்.
தொடர்ந்து பேசிய காவல்துறையினர், "எதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. காரணம், இந்த திரையரங்கில் அமரன், கங்குவா என இரு படங்களுமே திரையிடப்பட்டுள்ளன. அதனால் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. சம்பவத்துக்கு காரணமாக இருவரையும் கைது செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் பிடிபடுவார்கள்" என்கிறார்கள்.
இந்த நிலையில் வெடிகுண்டு சம்பவத்தை கண்டித்த நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திரையரங்கைப் பார்வையிட இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினர் சென்றனர். திரையரங்கில் மோப்பநாய் சோதனை மற்றும் கைரேகை பரிசோதனை நடப்பதால் யாரையும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
அதனால் காவல்துறையினருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வி.பி.ஜெயக்குமார் தலைமையில் திரையரங்கின் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழி வகுக்கும் வகையில் செயல்பட்டதாக இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.