திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
வீட்டை பெங்களூருக்கு மாற்றினால்.. சமூக வலைதளத்தை இரண்டாக்கிய ஸ்ரீதர் வேம்பு பதிவு
பெங்களூருவை உங்கள் வீடாக மாற்றிக்கொண்டால், கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளைகளும் கன்னடம் கற்க வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவால், சமூக வலைதளமே இரண்டாகிக் கிடக்கிறது.
பொதுவாகவே, ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் சில கருத்துகள் ஆஹா ஓஹோ என பாராட்டப்படுவதும் சில வேளைகளில் எதிர்பாளர்களால் கருத்துக்கு கடும் எதிர்ப்பும், அதற்கு ஸ்ரீதர் வேம்புவின் பதிலும் காரசாரமாக போவதும் இயல்புதான்.
அந்த வகையில்தான் ஸ்ரீதர் வேம்பு, இந்த வார இறுதி நாள்களை விறுவிறுப்பாக்கும் வகையில் ஒரு இடுகையை பதிவிட்டுள்ளார்.
அதில், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன், ஒருவேளை, நீங்கள், பெங்களூருவை உங்கள் வீடாக மாற்றினால், நீங்கள் கண்டிப்பாக கன்னடம் பயில வேண்டும். உங்கள் பிள்ளைகளும் கன்னடம் படிக்க வேண்டும்.
பல ஆண்டுகள் பெங்களூருவில் வசித்துக்கொண்டு கன்னடம் தெரியாமல் இருப்பது மரியாதைக்குறைச்சல்.
நான் எப்போதும், சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் என் ஊழியர்களுக்கு ஒன்றை சொல்வேன், அது இங்கு வந்ததும் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்பதே அது என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு, கன்னடம் கற்கலாம், பிற மொழிகளைக் கற்கலாம் என்று சொல்லும் ஒரு தரப்பினரும், தங்கள் தாய் மொழி இருக்க பயமேன் என்றும், ஆங்கிலம் தெரிந்தால் போதும் என்று ஒரு தரப்பும் என இரண்டு பிரிவினர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சிலர், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் கன்னடர்கள் இருப்பார்கள், அவர்கள் மராத்தி பேசுவார்களா என, ஸ்ரீதர் வேம்பு பதிவுக்கு எதிராகவும், வெளிநாடு செல்லும்போது, அங்கு பேசும் மொழியைக் கற்க நாம் தயங்குவதில்லை, ஆனால், ஒரு இந்திய மொழியைக் கற்க வேண்டுமென்றால் எதிர்க்கிறோம் என்று ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.
ஐடி துறையில் சிலர் சென்னையில் 2 ஆண்டுகள், பெங்களூருவில் 4 ஆண்டுகள், ஹைதராபாததில் 3 ஆண்டுகள் இருப்பார். எனவே அனைத்து மொழிகளையும் கற்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதுபோல சிலர், மொழி எங்குமே தடையில்லை, நாம்தான் பெரியவர் என்ற எண்ணம்தான் பிரச்னை. துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற கருத்துகளை நீங்கள் பதிவிடுவது வருத்தமாக இருப்பதாகவும் சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்.
இப்படியே கருத்துகள் மூலம் சமூக வலைத்தளத்தில் இன்று இந்த விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது.