ராகுல், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என பொய்களைப் பரப்பும் மோடி: பிரியங்கா
இடஒதுக்கீடுக்கு ராகுல் காந்தி எதிரானவர் எனப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பொய்களைப் பரப்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான சீரடியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரியங்கா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
மாநிலத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதால் மோடியும், அமித் ஷாவும் பயப்படுகிறார்கள்.
நாங்கள் அனைவரும் மகாராஷ்டிரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். ஆனால் இந்த மண்ணில் சத்ரபதி சிவாஜி மகாராஜா அவமதிக்கப்படுகிறார். மக்களான நீங்களும் அவமதிக்கப்படுகிறீர்கள்.
முன்னதாக சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார், ஆனால் அதற்கான பணிகளை அவரே நிறுத்தினார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை அகற்றப்பட்டது. சிந்துதுர்க்கில் நிறுவப்பட்ட சிலை, அதன் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததால் இடிந்து விழுந்தது. எனவே அவர் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பு நீக்கப்படும் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு அவர் சவால் விடுத்தார்.
மேலும் எனது சகோதரர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் அவமதிப்பைக் காங்கிரஸ் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் கூறினார்.