அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களுடன் உத்தவ் தாக்கரே பேசியதாவது,
''அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியது, பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது. இதன்மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித் ஷா மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் பதவி விலக வேண்டும்
தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி, சிவசேனை ( ஏக்நாத் ஷிண்டே பிரிவு) உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் அமித் ஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனவா? இது குறித்து கூட்டணி கட்சியினர் வெளிப்படையாக கருத்துக் கூற வேண்டும். இந்துத்துவா கொள்கை மூலம் பாஜக பிரித்தாளும் பணியையே செய்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே