தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?
புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், விபத்துகளும் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்தவாறு உள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்கள்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
இதனைத் தடுக்கவே `விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம்’ என்ற இலக்கை புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை நிர்ணயித்துள்ளது. சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலம் சாலை விபத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வருகிற ஜனவரி முதல் தேதியில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மேலும், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளோ ஊழியர்களோ தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 1000 அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.