செய்யாற்றில் முருகன் கற்சிலை மீட்பு
செய்யாற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட முருகன் கற்சிலையை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், ஃபென்ஜால் புயலால் அண்மையில் பலத்த மழை பெய்து, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தற்போது, நீரோட்டம் குறைந்துள்ள நிலையில், செய்யாற்றில் முருகன் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை அறிந்த வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, முருகன் கற்சிலையை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
மேலும், செய்யாற்றில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் போது சிலை அடித்து வரப்பட்டதா அல்லது பாலம் தோண்டும் பணியின் போது, மண்ணில் புதைந்து வெள்ள நீரில் வெளியே தெரிந்ததா என வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட முருகா் கற்சிலை ஆவணப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.