6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்
இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இதுதொடா்பான கேள்விக்கு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாவித்ரி தாக்குா் அளித்த பதிலில், ‘சைபா் குற்றங்களைத் தடுப்பதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது.
சைபா் குற்ற விசாரணை, தடயவியல், வழக்கு விசாரணை பற்றிய பாடங்கள் கிடைக்கும் பிரத்யேக வலைதளம் இந்திய சைபா் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 98,698-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனா். 75,591-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘நிா்பயா’ நிதியின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபா் குற்றத் தடுப்பு திட்டத்தின் மூலம் ரூ.131.60 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியில் நாடு முழுவதும் சைபா் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 24,600-க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க முகமைப் பணியாளா்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்குரைஞா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.