Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
நமது நிருபர்
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:
உலக அளவில் செமிகண்டக்டர் சிப்ஸ் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த இறக்குமதி 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளில் ஒன்று கூட இத்துறையில் ஆற்றல் மிக்க தென் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு சாதன மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விஎல்எஸ்ஐ மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் சிறப்புப்படிப்புகளை வழங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும், 1.13 லட்சம் இளைஞர்கள் டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டம் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 494 ஐடிஐ-கள் செமிகண்டக்டர் தொழிலுக்குத் தேவையான வகையில் 700 படிப்புகளை வழங்குகின்றன.
தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல், திறன்மிக்க தொழிலாளர்கள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இலக்குகளை விரைந்து எட்டுவதற்கு தனித்துவமான பங்கை வழங்கி வருகின்றன. ஆகவே, செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார் கனிமொழி.