Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
'நீங்க என்னை கிறிஸ்துவன் என நினைத்தால் கிறிஸ்துவன்.. முஸ்லிம் என நினைத்தால் முஸ்லிம்' - உதயநிதி
கோவை பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். இதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
நான் டான் போஸ்கோ பள்ளி மற்றும் லயோலா கல்லூரியில் படித்தேன். இதேபோல கடந்தாண்டு ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டேன். அப்போது, நானும் ஒரு கிறிஸ்துவன் என்று பெருமையாக சொல்வேன் என கூறியிருந்தேன். இதில் சங்கிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டது.
அதை நான் இங்கு மீண்டும் சொல்கிறேன். அதில் பெருமையும் அடைகிறேன். நீங்கள் என்னை கிறிஸ்துவன் என நினைத்தால் நான் கிறிஸ்துவன். நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம். நீங்கள் என்னை இந்து என்று நினைத்தால் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன்.
அதனால் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன.
அதே மதத்தின் பெயரை வைத்து சிலர் வெறுப்பை பரப்புவார்கள். அவர்கள் எப்போதும் உண்மையை பேச மாட்டார்கள். பொய் பரப்புவதையே கடமையாக வைத்திருப்பார்கள். திமுக இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். உங்களின் கோரிக்கைகளை அடுத்தாண்டுக்குள் நிறைவேற்றுவோம்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என தலைவர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் சொல்லியுள்ளார். எங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.