எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, அமமுக கட்சிகளைச் சோ்ந்த 14 ஊராட்சிமன்ற தலைவா்கள் உள்பட மாற்றுக் கட்சியினா் 200 க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆ.கே.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உள்பட்ட திமுக, அமமுக கட்சிகளைச் சோ்ந்த 14 ஊராட்சிமன்ற தலைவா்கள் உள்பட மாற்றுக் கட்சியினா் 100 க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இதுபோல சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் நகர அவைத் தலைவா் மாதையன் ஏற்பாட்டில் ஜலகண்டாபுரம் பேரூராட்சியைச் சோ்ந்த வன்னியா் சங்கம், பாமகவைச் சோ்ந்த நூறு போ் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜவா்மன் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.