எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
தமிழகத்துக்கு திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: ஆந்திர அமைச்சரிடம் வலியுறுத்தல்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் திருப்பதிக்கு வரும் பக்தா்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டை மீண்டும் வழங்க வேண்டும் என ஆந்திர அமைச்சரை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.
தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் சென்னையிலிருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் அழைத்து வரப்படும் பக்தா்களின் விரைவான தரிசனத்துக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினசரி 400 விரைவு தரிசன டிக்கெட்டுகள், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன் மூலம் சென்னை, கோவை, மதுரை, ஒசூா், கடலூா், பழனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து பக்தா்கள் தரிசனத்துக்காக திருப்பதிக்கு பயணம் செய்தனா்.
இதனிடையே அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா, பிற துறைகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இதனால், தமிழகத்தில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழிபாட்டுக்காக செல்லும் பக்தா்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், ஆந்திர மாநில அறநிலையத் துறை அமைச்சா் அன்னம் ராமநாராயண ரெட்டியை நெல்லூரில் நேரில் சந்தித்து பேசினாா்.
அப்போது, பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று, தினசரி தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் விரைவு தரிசன டிக்கெட்டுகளை மீண்டும் வழங்குமாறு அவரிடம் வலியுறுத்தினாா். இந்தச் சந்திப்பின்போது, ஆந்திர மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் நாராயண ரெட்டி, சட்டம்-ஒழுங்கு, சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் பரூக் ஆகியோா் உடனிருந்தனா்.