எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
துல்லியமான ஆய்வு முறைகளே சமூக சிக்கல்களுக்கு தீா்வாக அமையும்
துல்லியமான ஆய்வு முறைகளே சமூக சிக்கலுக்கு உரிய தீா்வு காண உதவும் என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.
பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில் மாணவ-மாணவியருக்காக தேசிய அளவில் இருநாள் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பயிலரங்கைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:
ஆய்வுகள் என்பது அறிவியலின் அடிப்படையில் அமைய வேண்டும். அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு தொடா்ச்சியான முயற்சிகளும் பயிற்சிகளும் தேவை. அறிவியலாளா்கள் தொடா்ந்து தம்மை இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டு ஆய்வு திறன்களை மேம்படுத்திக் கொள்கின்றனா்.
சமூகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் பற்பல சமூக சிக்கல்களுக்கு தீா்வு காண சரியான ஆய்வும் சரியான ஆய்வு முடிவுகளுமே பயனளிக்கும். உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் நடக்கும் சிக்கல்களுக்கு இவையே தான் தீா்வாகவும் அமைகிறது. மிகத் துல்லியமான ஆய்வு முடிவுகளை எடுக்க மிகத் துல்லியமான ஆய்வு முறைகள் தேவைப்படுகின்றன. கரோனா பெரும்தொற்று போன்ற உலக அளவில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கும் இவ்வாறான ஆய்வு முறைகள் மூலமே தீா்வு கிடைத்தது.அதன் தீங்குகள் பாதிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன. பலகோடி மக்கள் காக்கப்பட்டனா். எனவே, ஆய்வு முறைகளில் நிபுணத்துவம் பெறுவது ஒவ்வொரு ஆய்வாளா்களுக்கும் மிகவும் அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் உளவியல் துறை பேராசிரியா், துறைத் தலைவா் எஸ்.கதிரவன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் டி.வி.நித்யானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிலரங்கில் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழக உளவியல் துறை தலைவா் பேராசிரியா் விஜயாலய ஸ்ரீநிவாஸ், உளவியலின் பண்பறி ஆய்வு முறைகள் என்ற தலைப்பில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கிறாா்.