அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்: பிரதமர் மோடி
புது தில்லி: அம்பேத்கர் மீது முழு மரியாதை இருக்கிறது, அவரை முழுமையாக மதிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள் என்று ஒரு பட்டியலையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.
அதன் நிறைவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றரை மணி நேரம் பேசியிருந்த உரை கடும் பேசுபொருளாகி, இன்று நாடு முழுவதும் பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், அதை மறைக்கவே காங்கிரஸ் கட்சி தற்போது முயற்சிக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததை நாட்டு மக்கள் நன்றாகவே பார்த்திருக்கிறார்கள். அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்த வரலாற்றைத்தான் அமித் ஷா அம்பலப்படுத்தியிருந்தார். அதைக் கேட்டு எதிர்க்கட்சிகள் மிரண்டுபோய்விட்டார்கள்.
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை மறுத்தது காங்கிரஸ் கட்சிதான். அம்பேத்கருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் நேரு. அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்க ஒரு வம்சத்தின் கட்சி முழுமையாக ஈடுபட்டது. அம்பேத்கரை, இரண்டு முறை காங்கிரஸ் கட்சிதான் தேர்தலில் தோல்வியடையச் செய்தது என்று காங்கிரஸ் அவமதிப்பு என்று ஒரு பட்டியலையே மோடி வெளியிட்டிருக்கிறார்.
அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்கவே பாஜக அரசு பாடுபடுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பல காலம் இருந்த காங்கிரஸ், எஸ்சி, எஸ்டி சமூக மக்கள் அதிகாரம் பெறுவதற்கு எதையும் செய்யவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டியிருக்கிறார்.