நான் இந்தத் தொடரில் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்
ஐ.டி. அதிகாரிகள் - போலீஸ் எஸ்.ஐ சேர்ந்து செய்த வழிப்பறி... சென்னையில் பகீர் சம்பவம்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது கௌஸ் (31). இவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் காங்கிரஸ் பிரமுகர் ஜூனத் அகமது என்பவர் நடத்தி வரும் லேப் ஒன்றில் கடந்த ஒராண்டாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் புதிதாக சி.டி.ஸ்கேன் மிஷினை வாங்க 20 லட்சத்தை முகமது கௌஸிடம் ஜூனத் அகமது கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை தன்னுடைய பைக்கில் வைத்துக் கொண்டு முகமது, திருவல்லிக்கேணிக்கு வந்திருக்கிறார்.
சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவமனை அருகே முகமது வந்தபோது பைக்கில் போலீஸ் சீருடையில் வந்த ஒருவர் வழிமறித்து விசாரித்திருக்கிறார். அப்போது முகமது, முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முகமதுவின் பைக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸ் சீருடையில் வந்தவர், பணத்துக்குரிய ஆவணங்களை கேட்டிருக்கிறார். ஆனால் ஆவணங்கள் இல்லாதததால் முகமதுவை வருமான வரித்துறை அதிகாரியிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு போலீஸ் சீருடையில் வந்தவர் சென்றுவிட்டார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தையும் முகமதுவையும் காரில் ஏற்றிக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டனர். ஆனால், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை பகுதியில் கார் சென்ற போது முகமதுவை கீழே இறக்கி விட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 5 லட்சம் ரூபாயை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த முகமது, தன்னுடைய ஓனர் அகமதுவிடம் விவரத்தை போனில் தெரிவித்தார். உடனே அகமது, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி தெரிவித்தார். அதன்படி முகமதுவும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்தச் சூழலில் முகமது காவல் நிலையத்திலிருப்பதை கவனித்த போலீஸ் சீருடையில் வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவித்தார். அதோடு தன்னுடைய உயரதிகாரியான இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் நான்தான் முகமதுவை ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என தெரிவித்தார்.
அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் பிரகாஷ், "பணத்துடன் வந்த முகமதுவை ஏன் காவல் நிலையத்துக்கு அழைத்து வராமல் ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தீர்கள்?" என சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங்கிடம் கேள்வி கேட்டார். அதற்கு, அவரால் பதிலளிக்க முடியவில்லை.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங் அளித்த தகவலின்படி, ஐ.டி அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்களாகவும் சுப்பிரண்டாகவும் பணியாற்றுவது தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு தாமோதரன், பிரதீப், பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளளனர். முகமதுவை மிரட்டி பறித்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் சேர்ந்து லட்சக்கணக்கான பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.