'போதை மருந்து கடத்தல், ஊழலில் பங்கு...' - பெருகும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகள்... தப்பிப்பது எப்படி?!
டிரிங் டிரிங்
"மும்பை போலீஸ் பேசுறோம். உங்க பேர் ரவி தானே?"
"ஆமா சார்".
"உங்க பேர் மற்றும் அட்ரஸுக்கு துறைமுகத்துல நாலு பாக்ஸ் போதைப்பொருட்கள் வந்து இறங்கியிருக்கு. உங்களுக்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?"
"என் பேருல போதைப்பொருளா எனக்கு தெரியல சார். நான் ஐ.டி கம்பெனில நல்ல சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். நான் எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?"
"அத தான் நாங்களும் கேக்கறோம். எதுக்காக போதைப்பொருள் வாங்கியிருக்கீங்க. கடத்தலுக்கா...இல்ல, நீங்களே பயன்படுத்துவீங்களா?"
"ரெண்டுமே இல்ல சார். எனக்கு ஒண்ணுமே புரியல".
"போதும்...உங்களை இப்போ 'டிஜிட்டல் அரஸ்ட்' பண்றோம். இப்போ நாங்க அனுப்பி விடற லிங்க்ல வீடியோ கால் வாங்க. இந்த டிஜிட்டல் அரஸ்ட் பற்றி யாருகிட்டயும் சொல்லாதீங்க. சொன்னா உங்களுக்கு தான் பிரச்னை".
வாட்ஸ்ஆப்பிற்கு ஒரு லிங்க் வருகிறது. அதில் ஜாயின் செய்தப்பிறகு, டிப் டாப் யூனிபார்மில் நால்வர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் நமது நாட்டின் சின்னமான சிங்கங்கள் கர்ஜிக்கின்றன. நான்கு பேரும் தங்களது ஐடி கார்டை காட்டி அறிமுகப்படுத்தி கொள்கிறார்கள்.
"சொல்லுங்க...நீங்கள் 'இதில்' 'இவ்வளவு' முதலீடு செய்திருக்கிறீர்கள். கடைசியாக, உங்கள் வங்கியில் 'இவ்வளவு' பெரிய தொகை கடைசியாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆக, உங்களை பத்தின எல்லா தகவல்களும் எங்க கிட்ட இருக்கு. அதனால, எங்களுக்கு கரெக்டா கோப்பரேட் பண்ணுங்க (அத்தனை தொகையும் சரியாக இருக்க ரவி திகைக்கிறார்)"
"இப்போ நான் என்ன செய்யணும் சார்?"
"பயப்படாதீங்க...உங்க மேல தப்பு இல்லனு உங்க கிட்ட பேசுனப்பிறகு புரியுது. அதை கன்பார்ம் பண்றதுக்கும், ஆவணமா மாத்தறதுக்கும் 50 லட்ச ரூபாய நாங்க சொல்ற அக்கவுண்ட்டுக்கு இப்போவே டிரான்ஸ்பர் பண்ணுங்க. ஜஸ்ட் புரோசிஜர் தான். உங்க மேல தப்பு இல்லன தெரிஞ்சதும் இந்தத் தொகையை உங்களுக்கே திருப்பி தந்துருவோம்".
(பயத்தில் அந்த அக்கவுண்ட்டுக்கு ரவி டிரான்ஸ்பர் செய்ய, தொகை கைமாறியதும் வீடியோ கால் கட் ஆகிறது)
இப்போது தான், ரவிக்கு தான் ஏமாற்றப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது.
மேலே சொல்லப்பட்ட கதை கற்பனையானது என்றாலும், கான்செப்ட் அப்படி அல்ல. இப்படி இதே கான்செப்ட்டில் 'டிஜிட்டல் அரஸ்ட்' என்ற பெயரில் சமீபத்தில் பல லட்ச ரூபாய்கள், பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்படுகின்றன. ஐ.டி ஊழியர், 90 வயதான ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர், பத்திரிகையாளர் என இந்த மோசடி வலையில் சிக்கியவர்களின் பட்டியல் நீள்கின்றது.
ஆனால் இந்திய சட்டப்படி, 'டிஜிட்டல் அரஸ்ட்' என்ற ஒன்று கிடையவே கிடையாது. மோசடி பேர்வழிகள் மிக தைரியமாகவும், அசல் மாதிரியான ஐ.டி கார்டு, ஆபீஸ் பேக் கிரவுண்ட் போன்றவற்றை பயன்படுத்துவதால் அவர்கள் அதிகாரிகள் என்று நம்ப வைக்கப்படுகின்றனர்.
நமக்கு நாமே!
போதை மருந்து கடத்தல் மட்டுமல்ல...சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை, ஊழல் வழக்கில் சிக்கி உள்ளவர்களுடன் தொடர்பு என்று தினுசு தினுசாக காரணங்கள் கூறி இந்த மோசடியில் ஏமாற்றப்படுகின்றனர்.
இன்றைய யுகத்தில் பாதுகாப்பு அம்சங்கள் எவ்வளவு டி.பி ஸ்பீடில் அப்கிரேட் ஆனாலும், அதைவிட பல மடங்கு அதிகமாக மோசடிகள் முளைக்கின்றன...பெருகுகின்றன. அதனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் சுயமாக நாமே அப்டேட்டாகவும், உஷாராகவும் இருப்பது மிக மிக அவசியம்.
ஒருவேளை அப்படி எதாவது போன்கால் வந்தால்...
இனி இப்படி எதாவது போன்கால் உங்களுக்கு வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அந்த நம்பரை பிளாக் செய்வது தான். ஒருவேளை போன்கால் பேசி அத்தனையும் நம்புவது போன்றே இருந்தாலும் எக்காரணத்தை கொண்டும் பண பரிவர்த்தனை மட்டும் செய்துவிடாதீர்கள். அதுவும் நடந்துவிட்டால் மோசடி நடந்த 15 - 20 நிமிடங்களில் 1930 என்னும் நிதி சார்ந்த உதவி எண்ணுக்கு போன் செய்தால் எந்தவொரு கணக்கும் முடக்கப்படும். மேலும், உடனடியாக சைபர் கிரைமில் புகாரளித்து விடுங்கள்.