டிஜிட்டல் அரெஸ்ட்... மிரட்டல்... மோசடிக் கும்பலிடம் ஒரு மாதத்தில் ரூ.4 கோடியை இழந்த மூதாட்டி!
இணைய தள குற்றவாளிகள் இப்போது பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். அதுவும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் போலியாக கைது செய்து அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து முழு பணத்தையும் அபகரித்துக்கொள்கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விசாரணை ஏஜென்சிகளும் தாங்கள் டிஜிட்டல் முறையில் ஒருபோதும் கைது செய்வது கிடையாது என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் சைபர் கிரிமினல்களின் வலையில் பொதுமக்கள் விழுந்துகொண்டுதான் இருக்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 77 வயது மூதாட்டி தனது 4 கோடி ரூபாயை இழந்துள்ளார். தென்மும்பையில் வசிக்கும் 77 வயது மூதாட்டிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் `உங்களது பெயரில் தைவானுக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பார்சலில் 5 பாஸ்போர்ட், பேங்க் ஏ.டி.எம்.கார்டு, 4 கிலோ துணி மற்றும் போதைப்பொருள் இருந்தது' என்று தெரிவித்தார். உடனே அப்பெண் தான் எந்த வித பார்சலையும் யாருக்கும் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் போனில் பேசிய நபர் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தித்தான் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கொண்டு மும்பை போலீஸ் அதிகாரியிடம் பேசுங்கள் என்று தெரிவித்தார். அதோடு போன் அழைப்பை வேறு ஒரு அதிகாரிக்கு மாற்றிவிட்டார்.
அதில் பேசிய நபர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டார். அதோடு, உங்களது ஆதார் கார்டு பணமோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். அம்மூதாட்டி தனக்கு அதில் தொடர்பு கிடையாது என்று தெரிவித்தார். உடனே ஸ்கைப் ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படியும், உங்களிடம் அதிகாரிகள் பேசுவார்கள் என்றும் தெரிவித்தார். அதோடு போன் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அந்த நபர் தெரிவித்தார்.
ஆனந்த் ரானா என்பவர் மூதாட்டியிடம் தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பிறகு ஜார்ஜ் என்பவர் போன் செய்து அவரும் தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்றும், நிதித்துறை அதிகாரி என்று தெரிவித்தார். அதோடு மூதாட்டிக்கு மும்பை குற்றப்பிரிவு போலீஸ் சார்பாக போலி நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி வைத்தனர். உடனே விசாரணைக்கு வசதியாக உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வையுங்கள். உங்கள் மீது எந்த வித தவறும் இல்லாத பட்சத்தில் பணத்தை திரும்ப அனுப்பி விடுவோம் என்று போனில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
24 மணி நேரமும் வாட்ஸ்அப் வீடியோ காலில் இருக்கும்படி போனில் பேசியவர்கள் கேட்டுக்கொண்டனர். உடனே கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் காலை ஆன் செய்து வைத்திருந்தார் மூதாட்டி. வீடியோ கால் கட்டாகிவிட்டால் உடனே மீண்டும் கால் செய்து தொடர்ந்து வீடியோ காலில் இருக்கும்படி மர்ம நபர்கள் கேட்டுக்கொண்டனர். உடனே வங்கிக்கு சென்று 15 லட்சத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். வங்கியில் ஏன் என்று கேட்டால் சொத்து வாங்குவதாக கூறும்படி கூறி அனுப்பினர். மூதாட்டியும் 15 லட்சத்தை அனுப்பினார். ஆனால் சில நாள்களில் அந்த 15 லட்சத்தை மூதாட்டிக்கு திரும்ப அனுப்பி இந்த பணத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினர்.
அதன் மூலம் மூதாட்டியிடம் நம்பிக்கையை வரவைத்து உங்களது வங்கிக் கணக்கு மற்றும் உங்களது கணவருடன் சேர்ந்து இருக்கும் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். மூதாட்டியும் 6 வங்கிக் கணக்கிற்கு 3.8 கோடியை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பணத்தை திரும்ப அனுப்பாமல் மேற்கொண்டு பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த மூதாட்டி இது குறித்து தனது மகளுக்கு போன் செய்து தெரிவித்தார். உடனே ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவரது மகள் இது குறித்து உடனே போலீஸில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். மூதாட்டி 1930 என்ற போலீஸ் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மூதாட்டி பணம் அனுப்பிய 6 வங்கிக் கணக்குகளையும் முடக்கிய போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்தில் மூதாட்டி 3.88 கோடி ரூபாயை இழந்துள்ளார்.