``CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' - மத்திய அரசு குறித்து கனிமொழி
பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, நேற்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து CA தேர்வை ஜனவரி 14 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்தி வைத்திருக்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாடும் திமுகவும் எப்போது மக்களின் பிரச்னைகளுக்கு நிற்கின்றன. நம் அனைவரின் மனதிற்கும் நெருக்கமான பொங்கல் தினத்தன்று CA தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தேன்.
தற்போது ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. ஆனாலும், நமது கலாசாரம் தொடர்பான விஷயத்தில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் இதுபோன்று செய்வது வருத்தமளிக்கிறது. உண்மையான ஒருங்கிணைப்பு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...