செய்திகள் :

தமிழகத்தில் மரபணு மாற்று மக்காச்சோளம் சட்டவிரோதமாக விற்பனை! முதல்வருக்கு கடிதம்

post image

தமிழகத்தில் மரபணு மாற்று மக்காச்சோளம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய ஆய்வக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் மரபணு மாற்று மக்காச்சோளம் விற்பனை செய்யப்படுவதாகவும் இது தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்து முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாய அமைப்பின் சார்பில் இரா. செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (NIFTEM-T) உணவு உயிரித் தொழில் நுட்பத் துறையின் ஆய்வறிஞர்கள், அண்மையில் வல்லுநர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டபின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள்.

அதில் தஞ்சையில் உள்ள கும்பகோணம் அருகில் மரபணு மாற்றும் செய்யப்பட்ட மக்காச்சோளம் தானியமும், அந்த தானியத்தில் இருந்து பதப்படுத்தப்பட்ட பண்டங்களும் விற்கப்படுவதை குறிப்பிட்டுள்ளனர்.

ஏடிஆர்-எப்டிஐஆர் மற்றும் பிசிஆர் ஆகிய ஆய்வு அணுகு முறைகளின்படி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். பிசிஆர் முறையில் சோதிக்கப்பட்ட 34 மாதிரிகளில் 15.39% மக்காச்சோளம் மரபணு மாற்றும் செய்யப்பட்டவை என்று கண்டறிந்துள்ளனர். ஏடிஆர்-எப்டிஐஆர் ஆய்வுகள் 20% அளவிற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஒற்றுமைகளும், கூறுகளும் இருப்பதாக தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழுவால் டபிள்யூஎஸ்3 என்று பெயரிடப்பட்ட மக்காச்சோளம் மாதிரிகள் பெறப்பட்ட இடத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள், சுவாமி முத்தையன் ஸ்டேடியம், முத்தையன் கோயில் தெரு, கோரத்தாகுடி என்றும் தெரிவிக்கிறது. இது கும்பகோணத்தில் இருந்து 1 மணி நேர பயண தூரத்தில் உள்ள இடமாகும். இதனடிப்படையில் தமிழகத்தில் மரபணு மாற்றும் செய்யப்பட்ட மக்காச்சோளம் விற்கப்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் இப்படி கள்ளத்தனமாக அனுமதி அளிக்கப்படாத மரபணு மாற்றுப் பயிர்களை விளைவிப்பதும், விதைகளை விற்பதும் பல்லாண்டுகாலமாகவே நடந்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன் களைக் கொல்லியைத் தாங்கும் பருத்தி

5 ஆண்டுகளுக்கு முன் ஹரியாணாவில் பி.டி. கத்தரி

7 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் சோயா மொச்சை

இவை ஒரு சோற்றுப் பதம் போன்ற எடுத்துக்காட்டுகளே.

இப்படிக் கள்ளத்தனமாக மரபணு மாற்றுப் பயிர்கள் இந்திய மண்ணில் விளைவிக்கப்படுவதை, எல்லை தாண்டி உள்ளே கொண்டு வரப்படுவதை, ஆய்வுக் கூடங்களில் இருந்து தவறுதலாக வெளி உலகில் கலப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், இப்படியானத் தவறுகளை செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் உரிய அமைப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாகவே கோரப்பட்டு வருகிறது.

இத்தகு தவறுகளைச் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய பின்னும், மரபணு மாற்று அங்கீகாரக் குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று உள்ளதையும் பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து மத்திய அரசிற்கு சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு இப்பிரச்சனையில் எவ்வித அக்கறையையும் செலுத்தாமல் இருந்து வருகிறது.

இதையும் படிக்க | சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!

மத்திய அரசின் அக்கறையின்மையும், மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் செயலற்ற தன்மையும் இந்திய உயிரியல் பன்மயத்திற்கும், இந்திய வேளாண்மைக்கும், உழவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. மேலும், இந்த செயலற்ற தன்மை இந்திய இறையாண்மைக்கும் எதிரான ஒன்றாக உள்ளது.

இன்னொரு பக்கம் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (FSSAI) 2021 மார்ச் மாதம் 1-ம் தேதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மக்காச்சோளம் உள்ளிட்ட 24 உணவு தானியங்களுக்கு, 'மரபணு மாற்றம் செய்யப்பட்டவையல்ல, மரபணு மாற்றுக் கலப்படம் இல்லாதவை' என்று சான்றைக் கட்டாயமாக்கியது.

ஆயினும் தஞ்சையின் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் ஆய்வாளர்களின் கள ஆய்வில் இந்த விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம், முன்னர் செய்யப்பட்ட வயல் வெளி சோதனைகளின்போது காற்றில் கலந்த மகரந்தங்கள் பிற மக்காச்சோளம் பயிரில் கலந்ததால் வந்ததா? ஆய்வுக்கூடங்களின் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள் ஏதேனும் ஒரு வகையில் வெளியில் கொடுக்கப்பட்டுள்ளதால் நேர்ந்ததா? இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோளம் மூலம் வந்ததா? பன்னாட்டு விதை நிறுவனங்களே தங்களின் வழக்கமான பாணியில் கள்ளச் சந்தையை உருவாக்குகின்றனவா? எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

எதுவாக இருப்பினும், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள வழிமுறைகள், பல்வேறு மத்திய அரசின் அமைப்புகள் உருவாக்கியுள்ள விதிகள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு ஆணைய விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கனமழை: முதல்வர் தலைமையில் அவசர ஆய்வுக் கூட்டம்!

இந்த நிலையில் தமிழக அரசு,

1) சட்ட விரோதமாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மரபணு மாற்று மக்காச்சோளத்தின் கள்ளத்தனமான நுழைவைக் கண்டறியவும்,

2). மீண்டும் இப்படி மரபணு மாற்று விளைபொருட்கள், அவைகளால் செய்யப்பட்ட பண்டங்கள் நுழைவைத் தடுக்கவும்,

3). விதிகளை மீறி தற்போது இறக்குமதி செய்தவர்கள் அல்லது வெளியிடச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்

4). சூப்பர் மார்க்கெட்களில், பிற கடைகளில் இருக்கும் மரபணு மாற்று மக்காச்சோளத்தை திரும்பப் பெற்று அழிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

5). இந்த மக்காசோளத்தை விவசாயிகள் எவரேனும் வாங்கி விதையாகப் பயன்படுத்தி இருப்பின் அந்தப் பயிர்களை அழிக்கவும், விதைத்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

5. மேலும் மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகள், பண்டங்கள் குறித்தவைகளைக் கையாளும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் உள்ளிட்ட துறைகளை தமது மெத்தனத்தில் இருந்து விழித்தெழுந்து கவனத்துடன் இயங்க வைக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

6. மரபணு மாற்று மக்காச்சோளம், கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமம் வரை பரவி இருப்பதால் தமிழகமெங்கும் உள்ள, மொத்த விற்பனை மையங்கள், விற்பனை மையங்களில் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் மாதிரிகள் எடுத்து களத்திலேயே சோதித்தறியும் கருவிகள் கொண்டு சோதனைகள் நடத்திட வேண்டுகிறோம்.

7. மரபணு மாற்று மக்காச்சோளம் கொண்டு ஆய்வக எலிகளில் செய்த ஆய்வுகளில் அவைகளின் உள் உறுப்புகளில் புற்றை உருவாக்கும் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் உள்ளிட்ட பாதிப்புகளை பிரான்சு ஆய்வாளர் எரிக் செராலினி கண்டறிந்துள்ளார்.

ஆந்திரத்தில் உள்ள பி.டி. பருத்தி இலைகளை உண்ட கால்நடைகள் மரணமடைந்தது பரவலாக பத்திரிக்கை மற்றும் ஊடகச் செய்தியானது. இத்தகு இறப்புகள் தமிழகத்திலும் இருக்கலாம் அல்லது ஏற்படலாம். எனவே தமிழகமெங்கும் மக்காச்சோளத்தை தீவனமாக உண்ணும் மாடுகள், கால்நடைகளில் இத்தகு பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை கால்நடைத் துறையும், மீன் வளத்துறையும் கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

8. தமிழகம் மரபணு மாற்றுப் பயிர்களை தூரத் தள்ளிவைப்பதில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் மாநிலமாகும். மேலும் மரபணு மாற்றுப் பயிர்களையும், பண்டங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் அனுமதிக்கக் கூடாது என்ற தெளிவான நிலைபாட்டை எடுத்துள்ள ஒரே மாநிலமாகும். இது மட்டுமின்றி பி.டி. கத்திரியை அனுமதிக்கமாட்டோம் என 2010 பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசும் பின்னர் 2011-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கக் கூடாது என்ற உத்திரவையும் பிறப்பித்த மாநிலமாகும்.

இந்திய அளவில் மரபணு மாற்றுப் பயிர்களின், பண்டங்களின் ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும் முன்னெடுப்பில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம் தனக்கான உயிரிப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

9. மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகள், பண்டங்கள் நுழைவைத் தடுக்கவும், கண்காணிக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் ப... மேலும் பார்க்க

புதுவை, காரைக்கால்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி, காரைக்கால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, நவம்பர் 26(நாளை) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து பு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வுக் கூட்டம் ரத்து!

விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மு... மேலும் பார்க்க

புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை எனவும் தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், நேற்று (25-11-2024) காலை 08.30 மணி... மேலும் பார்க்க

கொல்லிமலை, அந்தியூர் ஏரி உள்பட மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள்: திறந்துவைத்தார் ஸ்டாலின்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பார்க்க