கனமழை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
Jaydev Unadkat: கைகொடுத்த SRH... IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனைப் படைத்த ஜெயதேவ் உனத்கட்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக (நவம்பர் 24,25) ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இதுவரை யாரும் போகாத விலையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது, ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வீரராக 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டது என சாதனை நிகழ்வுகள் அரங்கேறின.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியால், இரண்டாம் நாள் ஏலத்தில் அடிப்படை விலை ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத அரிய சாதனையைப் படைத்திருக்கிறார். அதாவது, ஐ.பி.எல்லில் அறிமுகமான சீசன் முதல் இதுவரை 13 முறை உனத்கட் ஏலம் போயிருக்கிறார். முதல்முறையாக, 2010 சீசனில் கொல்கத்தா அணியில் அறிமுகமான உனத்கட், 2011 சீசன் மெகா ஏலத்தில் மீண்டும் அதே கொல்கத்தா அணிக்கு ரூ. 1.10 கோடிக்குப் போனார்.
2012 சீசன் வரை கொல்கத்தாவில் ஆடிய உனத்கட்டை 2013 சீசனில் பெங்களூரு அணி வாங்கியது. அதைத்தொடர்ந்து, 2014 சீசனில் ரூ. 2.80 கோடிக்கும், 2015 சீசனில் ரூ. 1.10 கோடிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடினார். பின்னர், 2016 சீசனில் மீண்டும் தான் அறிமுகமான கொல்கத்தா அணிக்கு ரூ. 1.60 கோடிக்குச் சென்ற உனத்கட்டை, ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2017 சீசனில் வெறும் ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்திய உனத்கட், தனது ஐ.பி.எல் கரியரின் பெஸ்ட் சீசனாக இதனை மாற்றினார்.
அதற்கடுத்த சீசனிலேயே (2018), உனத்கட் தனது ஐ.பி.எல் கரியரில் அதிகபட்ச தொகையாக ரூ. 11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். பின்னர், 2019 சீசனில் மீண்டும் அதே ராஜஸ்தான் அணியால் ரூ. 8.40 கோடிக்கு வாங்கப்பட்ட உனத்கட் தான், அந்த சீசனில் அதிக விலைக்குப் போன வீரர் ஆவார். அடுத்த இரண்டு சீசன்களில் (2020, 2021) அதே ராஜஸ்தான் அணியில் ரூ. 3 கோடிக்கு உனத்கட் விளையாடினார்.
2018 முதல் 2021 வரை தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் ராஜஸ்தான் அணியில் விளையாடிய உனத்கட்டை, 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ. 1.30 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் மும்பையிலிருந்து கழற்றிவிடப்பட்ட உனத்கட், 2023 சீசனில் லக்னோ அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். ஆனால், அந்த சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடி விக்கெட் எதுவும் எடுக்காதபோதும், 2024 சீசனில் ரூ. 1.60 கோடிக்கு ஐதராபாத் அவரை வாங்கியது.
இந்த நிலையில், 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில், உனத்கட்டைத் தக்கவைக்காமல் வெளியில் விட்ட ஐதராபாத் அணியே மீண்டும் அவரை ரூ. 1 கோடிக்கு எடுத்திருக்கிறது. இதன்மூலம், ஐ.பி.எல்லில் 13 முறை ஏலம் போன முதல் வீரர் என்ற சாதனையை உனத்கட் படைத்திருக்கிறார். இதற்கு முன்னர், ஐ.பி.எல்லில் ஒரு வீரர் அதிகபட்சமாக 7 முறை ஏலம் போனதே சாதனையாக இருக்கிறது.
உனத்கட் தனது ஒட்டுமொத்த ஐ.பி.எல் கரியரில் 8 அணிகளில் 105 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.