Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." - தீபக் சஹாரின் மனைவி நெகி...
ஒடிசாவில் 40 யானைகள், 5 சிறுத்தைகள் பலி!
ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 40 யானைகள், 5 சிறுத்தைகள் மற்றும் 200 வனவிலங்குகள் பலியானதாக இன்று மாநில சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சரான ராம் சிங் குந்தியா இன்று சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தள் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, யானைகள் மற்றும் சிறுத்தைகள் இறந்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
வன விலங்குகள் கடந்த ஜூலை 1 முதல் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் இறந்ததாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை யானைகள் இறப்பு தொடர்பாக 26 பேரும், சிறுத்தைகள் இறப்பு தொடர்பாக 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் 3 பேர் பொறுப்பற்று நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்த மரங்கள் வளர்ப்பு, செயற்கை நீர்நிலைகளை உருவாக்குதல், காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பு, வேட்டையாடல் தடுப்பு முகாம்கள், பறவைகள் பாதுகாப்பு முகாம்கள், வன விலங்குகளின் இயக்கங்களை கண்காணித்தல், வேட்டையாடல் தடுப்பு படை நியமனம் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போன்ற சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 10 யானைகள் பலி: வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவு!
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராம் சிங், ”மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் இதுவரை 509 பேர் யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர். யானைக் கூட்டங்கள் இதுவரை 73,620 ஏக்கர் விவசாய நிலங்களையும், 10,259 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன.
யானைகள் மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளின் தாக்குதல்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கேந்திரபரா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 22 பேர் முதலைகளால் கொல்லப்பட்டனர். இவை, அனைத்தும் பருவமழையின் போது ஆறுகளில் நீரின் அளவு உயர்ந்ததால் நடந்த சம்பவங்கள்” என்று தெரிவித்தார்.
இதேபோல, மத்தியப் பிரதேசத்திலும் கடந்த மாதம் 10 யானைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.