Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
BJP: "தை மாதத்தில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர்" - சொல்கிறார் ஹெச்.ராஜா
கரூர், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (நவம்பர் 26) பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற அரசியல் பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, மாநிலத் துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவ ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, கேசவ விநாயகம், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தல்கள் தொடர்பான பயிலரங்கம் இன்று கரூரில் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 30- ஆம் தேதி வரை பா.ஜ.க கலை தேர்தல்கள் நடைபெற்று முடிந்து, டிசம்பர் முதல் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் பா.ஜ.க நகர, ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாவட்ட கமிட்டிக்கான தேர்தலில் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட கமிட்டிக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று முடிந்து, ஜனவரி முதல் வாரத்தில் மாநில தேர்தல் நடைபெறும்.
அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஜனவரி 15க்குள், அதாவது தை மாதத்தில் பா.ஜ.க புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்ததாகச் செய்திகள் வருகின்றன. அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை ஆகியவை வந்து கொண்டிருக்கின்றன.
மாநில அரசு இதுவரை வெள்ளம் என்றாலே சென்னை பற்றி மாத்திரமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த மாதம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கடுமையான மழை பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே, எல்லா மாவட்டங்களிலும் பணிக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, அரசாங்கம் மக்களின் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.
வங்கதேசத்தில் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசுக்கு, போதிய கையிருப்பு பணம் இல்லை என்பதால் அதானி குழுமம் மின்சாரம் வழங்கியதை நிறுத்திக் கொண்டது.
இதற்கு அமெரிக்கா சிபாரிசு செய்த போதும் அதனை அதானி குழுமம் நிராகரித்துவிட்டது. இதனால், அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்குக்காகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அதானி நிறுவனம் சோலார் பவர் காண்ட்ராக்ட் வாங்குவதற்காக சில மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் எனக் கூறியுள்ளது. அதில், முதலிடத்தில் தமிழ்நாடுதான் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டும் என ஏன் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை?. ஆந்திரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க அரசு ஆட்சியில் இல்லை. எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கன் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை அதானி பார்த்துக் கொள்வார். இதில், இந்தியப் பிரதமர் பதில் கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...