BJP: "தை மாதத்தில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர்" - சொல்கிறார் ஹெச்.ராஜா
திருச்சி: பாலத்திற்குப் பதிலாக தென்னை மரம்; அவலநிலையில் எலமனூர் கிராமம்; விவசாயிகள் சொல்வதென்ன?
"தினமும் ஆம்பளையும், பொம்பளைகளும் விவசாயம் செய்ய தென்னை மரத்தைப் போட்டு, அந்த மர பாலத்தைக் கடந்து போறது சர்க்கஸ்காரங்க அந்தரத்தில் நடப்பதுபோல் செய்ய வேண்டியிருக்கு. எந்த நேரத்தில் கால் நழுவி கீழே விழுந்திருவோமோங்கிற பயத்திலேயே எங்க பிழைப்பு அல்லாட்டமாக இருக்கு. இந்த கொடுமை நீங்க, கொடிங்கால் வாய்க்காலில் பாலம் கட்டி கொடுங்க.." என்று கண்ணீரோடு கோரிக்கை வைக்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எலமனூர் கிராம விவசாயிகள்தான் மேற்படி பிரச்னையைச் சந்தித்து வருகிறார்கள். எலமனூர் என்பது ஒரு தனித்தீவாக உள்ளது. இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த ஊரைத் தனித்தீவாக மாற்றும் கொடிங்கால் பாசன வாய்க்காலைத் தாண்டியும் நிறைய விவசாயிகள் நிலங்கள் உள்ளன. அந்த விவசாய நிலங்களை அடைவதற்கு வேற வழிகள் கிடையாது.
அந்த வாய்க்காலைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால், அந்த வாய்க்காலில் பாலம் கிடையாது. பல சமயங்களில் மக்கள் கழுத்தளவு நீரில் இறங்கித்தான் வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டும். அதனால், மக்களாக ஒரு தென்னை மரத்தை வெட்டி அதன் மேல் பாலம் போல் போட்டுள்ளனர். ஆனால், அதன் மேல் நடப்பது என்பது சர்க்கஸில் வித்தைச் செய்வது போன்று இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இதுபற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.
"கொடிங்கால் வாய்க்காலைத் தாண்டியுள்ள நிலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்த தென்னைமரக்கட்டை பாலத்தில் நடந்துதான் செல்ல வேண்டியிருக்கு. ஆனால், அது விவசாயிகளுக்கு அல்லலைத் தருது. ஏனென்றால், எல்லோராலும் அந்தப் பாலத்தில் நடக்க முடியாது. பொதுவாக, சுமைகள், விவசாயக் கருவிகள், உரங்கள், விதை, நெல் மூட்டைகள் என்று விவசாயத்துக்குத் தேவையான பல பொருட்களைத் தலையில் சுமந்து செல்ல வேண்டும். ஆனால், அந்த சுமைகளைத் தலையில் வைத்துக் கொண்டு அந்த பாலத்தின் மேல் நடக்க முடியாது. அதனால் மக்கள் கழுத்தளவு நீரில் இறங்கி வாய்க்காலைக் கடக்க வேண்டி உள்ளது. சமயத்தில், சுமைகளைத் தலையில் வைத்துக்கொண்டு அந்த வாய்க்காலுக்குள் இறங்கும்போது, அங்குள்ள சேற்றில் விவசாயிகளின் கால் வழுக்கி கீழே விழுந்து அடிபடுவதும், கால், கை பிசகிக்கொள்ளும் கொடுமையும் ஏற்படுது.
அதோடு, விவசாய நிலத்தை உழ டிராக்டர், குபேட்டா போன்ற வண்டி வாசிகளை வாய்க்காலைத் தாண்டி எடுத்துச் செல்லவும் மிகவும் சிரமபட வேண்டியுள்ளது. அதேபோல், அந்தப் பாலத்தின் மேல் நடப்பது மிகவும் அபாயகரமாக உள்ளதால் ஆண்கள், பெண்கள் அனைவரும் அந்த நீரில் இறங்கிதான் விவசாய வேலைகள் மற்றும் 100 நாள் வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. பாலம் பாதுகாப்பாக இல்லாமல் இருப்பதால் பெண்கள் நீரில் இறங்கி செல்கின்றனர். அந்த வாய்க்காலுக்கு அந்த புறமும் 100 நாள் வேலைக்குப் பெண்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அந்த பாலத்தைக் கடந்து தான் ஆக வேண்டும். இது, பெண்களுக்கு மிகவும் இடையூறாகவும், பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.
இயற்கை உபாதை உள்ள காலங்களில் பெண்கள் வாய்க்காலைக் கடந்து வேலைக்குச் செல்வதில்லை. இதனால் வேலையைத் தவிர்த்து விடுகின்றனர். அதனால், எலமனூர் விவசாயிகளான எங்கள் கோரிக்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதாவது, தற்காலிக நடவடிக்கையாக கொடிங்கால் வாய்க்காலின் இரண்டு புறமும் கைப்பிடி சுவர் உள்ள மரத்திலான பாதுகாப்பான பாலம் உடனே அமைத்து தர வேண்டும். அதன்பிறகு, இங்கு வெள்ளாமை செய்யப்படாத கோடைக் காலத்தில் இங்குள்ள விவசாயிகள் மற்றும் அவர்களது விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயம் செழிக்க கொடிங்கால் வாய்க்காலில் மேல் ஒரு பாலம் கட்டித் தர வேண்டும்.
அந்தப் பாலத்தில் டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள், லாரிகள் செல்வது போன்று ஒரு பெரிய பாலமாக கட்டித் தர வேண்டும். அனலை ரோட்டில் இதே கொடிங்கால் வாய்க்காலின் மேல் கட்டப்பட்டு உள்ளது போன்ற ஒரு பெரிய பாலத்தை இங்கும் கட்டித்தர வேண்டும். அனலையைக் கொடிங்கால் வாய்க்கால் கரையின் மேல் பெருகமணியுடன் இணைத்தது போல் எலமனுரை அனலை கொடிங்கால் பாலத்துடன் இணைக்க வேண்டும். அதேபோல், கொடிங்கால் வாய்க்காலின் இரண்டு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் மேல் ஒரு ரோடு அமைத்து தர வேண்டும். அது, இங்குள்ள விவசாயிகளுக்கு நீர்வழிச் சாலையாகப் பயன்படும்.
அதேபோல், இந்தப் பாலத்தை ராமவாத்தலையிலிருந்து வரும் நீச்சல் குழி கிணறு வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால், நீச்சல் குழி கிணறு வாய்க்காலின் அகலம் குறைந்தபட்சம் 16 அடி அதிகபட்சம் 19 அடி. அதன் கரையில் ஒரு ரோடை போட்டு இணைத்து விட்டால் எஎலமனூருக்கென்று ஒரு மாற்று வழி கிடைத்து விடும். இந்த விசயங்களைச் செய்தால், எலமனூர் கிராம விவசாயிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சர்க்கஸ் போன்ற அல்லலுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும்" என்றார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...