Jaydev Unadkat: கைகொடுத்த SRH... IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனைப் படைத்த ஜ...
`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை'- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?
மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ரீதியாக அவமரியாதை செய்து தொடர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, தி.மு.க-வைச் சார்ந்த மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள்( 52), அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாரளித்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள், ``மாஞ்சோலையில் இருக்கிற 10-வது வார்டில் ஜெயிச்சு, மணிமுத்தாறு பேரூராட்சி தலைவியாக இருக்கிறேன். 15 வார்டுகள் இருக்கிற இந்த பேரூராட்சிக்கு தலைவியா மாண்புமிகு முதல்வர் அவங்க இந்த பொறுப்பை எனக்கு கொடுத்தாங்க. ஆனா 2 வருசமா என்னோட பணியை செய்யவிடாம தி.மு.க கவுன்சிலர்கள் ஆதிக்கம் பண்றாங்க. அதுலயும் லேடி கவுன்சிலர்களோட கணவர்கள், மாமனார்கள் பேரூராட்சி கூட்டத்தை நடத்தவிடாம வெளியே நின்னுட்டு கையெழுத்தை மட்டும் போட்டுட்டு போயிருவாங்க.
நான் பதவியேத்த முதல் மாசத்திலிருந்து இந்த பிரச்னை தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கு, கவுன்சிலர்களோட வீட்டுக்கு போய் நாளைக்கு கூட்டத்துக்கு வந்துருங்கனு கூப்பிடுவேன், அப்போ வாரேன்னு சொல்லுவாங்க... ஆனா, மறுநாள் போன் பண்ணாகூட எடுக்க மாட்டாங்க. அப்படியே கூட்டத்துக்கு வந்தாலும் அவங்க விருப்பப்பட்ட நேரத்துக்குத்தான் வருவாங்க, அதுவும் வெளியே நின்னு மீடியாகாரங்கக்கிட்ட கூட்டம் நடக்கலனும், வெளிநடப்பு செய்றோம்னு சொல்லிட்டு போய்டுவாங்க. இதுநாள் வரைக்கும் பேரூராட்சி கூட்டத்தை ஒழுங்கா நடத்த விட்டதேயில்லை. என்னை எப்படியோ தலைவியா தேர்ந்தெடுத்துட்டாங்க, ஆனா நான் தலைவியா இருக்கிறது அவங்களுக்கு அப்போ இருந்தே பிடிக்கல. கிட்டத்தட்ட 3 முறை 'இந்த தலைவர் எங்களுக்கு வேணாம்'னு என்னை மாத்தணும்னு நம்பிக்கையில்லா தீர்மானத்தை 'மாவட்ட ஆட்சியர்கிட்டயும், A.D-கிட்டயும் கொண்டு போய்ட்டாங்க.
இதுநாள் வரைக்கும் அவங்க பண்ற பிரச்னைகள் எல்லாத்தையும் நான் கலெக்டர்கிட்டயும், மாவட்டச் செயலாளர்கிட்டயும் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். அவங்களும் கவுன்சிலர்கள் பண்றது தப்புதான்னு எனக்கு ஆதரவா தான் பேசுவாங்க. கட்சி சொல்றதையும் இவங்க கேட்க மாட்டுகாங்க, கட்சிக்கு கெட்டபேரு வந்துடக் கூடாதுன்னு நான் அவங்க மேல புகார் எதுவும் கொடுக்காம இருந்தேன். ஆனா இப்போ பணத்துக்காக இன்னொரு கவுன்சிலரை தலைவரா தேர்ந்தெடுத்து, என்னை பதவி நீக்கணும்னு கடந்த நவம்பர் 11ஆம் தேதி கூட்டத்துக்குக்கூட யாரும் வரல, மறுநாள் காலையில 4 வது மற்றும் 7 வது வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மது போதையில் பொது இடத்துல என்னை வழிமறிச்சு, பதவி வேண்டாம்னு எழுதிக்கொடுனு ரொம்ப ஆபாசமா பேசுனாங்க மேலும் உடம்பு சரியில்லன்னு எழுதிக்கொடுத்துட்டு ஊரை விட்டு ஓடிப்போயிடுனு மிரட்டுனாங்க அப்போ இவங்க என்னை என்ன நிலைமையில வச்சிருக்காங்க?
நான் மாஞ்சோலை தோட்ட தொழிலாளி, ஏன்கிட்ட இவங்க கேக்குற பணமெல்லாம் இல்லங்கிறதும், நான் பட்டியலினத்தை சார்ந்தவள் என்பதாலும், நிர்வாகத்தை தாண்டி அவங்க பண்ற ஊழலுக்கு நான் ஒத்துழைக்காததுமே இதுக்கு காரணம். இவங்க இப்படி பண்றதால மிகுந்த மன உளைச்சலை இன்னைக்கு வரைக்கும் அனுபவிச்சிட்டு வாரேன், எனவே அரசு நல்ல நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர், ``புகார் தொடர்பாக சி.எஸ்.ஆர் பதிவு செய்து இதுவரை மூன்று பேரை விசாரித்துள்ளோம். மற்ற பட்டியலினத்தைச் சார்ந்த கவுன்சிலர்களிடமும் விசாரிக்க உள்ளோம். மணிமுத்தாறு பேரூராட்சியின் E.O-வை நேரில் சென்று நானே விசாரிக்க இருக்கிறேன். மேலும் புகாருக்கான சாட்சியங்கள் எதுவும் தலைவி தரப்பிலிருந்து இதுவரை கொடுக்கப்படவில்லை" என்றார்.
இது தொடர்பாக... அந்தோணியம்மாள் குற்றம்சாட்டும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால், நம்மிடம் பேசியது வார்டு உறுப்பினர்களான மகளிர் அல்ல... மாறாக அவர்களுடைய கணவர்களே நமக்கு பதிலளித்தனர். அவர்கள் பேசுகையில், ``பேரூராட்சி தலைவி எங்கள் மீது அளித்த புகார் முற்றிலும் போலியானது. அவரின் செயல்பாடுகளால் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது. அவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம்." என்றனர்.