செய்திகள் :

Wedding Plan: செலிபிரட்டி ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு ரீ-கிரியேட் செய்யலாமா?!

post image
எல்லாருடைய வாழ்விலும் கொண்டாட்டம் மிகுந்த திருநாள் 'திருமண நாள்'. அந்தத் தினத்தில் மணமக்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். திருமண ஆடை சரியாக அமைந்துவிட்டால் பாதி பரபரப்பு குறைந்துவிடும்.

கூரைப்புடவை தொடங்கி லெஹெங்கா வரை பல விதமான ஆடை ரகங்கள் இருந்தாலும், ட்ரெண்ட் என்பதைத் தாண்டி நமக்கு எது சிறப்பான தோற்றம் தரும் என்பது தான் திருமண ஆடையில் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களின் திருமண ஆடை எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும், டிசைனரை தேர்வு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும், எங்கு ஷாப்பிங் செல்லலாம் என திருமண ஆடைத்தேர்வு குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சிந்து...

ஆடை வடிவமைப்பாளர் சிந்து

``பிரபலங்கள் போன்று ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாருக்கும் விருப்பமாக இருக்கும். ஆனால் திருமண ஆடைகளை வடிவமைக்கும் போது பிரபலங்களின் ஆடைகளை ரீ-கிரியேட் செய்வதில் இறங்கக்கூடாது. ஏனெனில் பிரபலங்களின் ஆடைகள் லட்சங்களில் இருக்கும். அதனை ரீ கிரியேட் செய்தால் குறைந்த பட்ஜெட்டில் நம்மால் அதே நேர்த்தியுடன் நிச்சயம் செய்ய இயலாது. என்ன தான் செலிபிரட்டி அணிந்திருந்த மாதிரியே ஒரே டிசைன், ஒரே கலர் தேர்வு செய்தாலும், நம் பட்ஜெட்டிற்கு ஏற்ப குறைந்த விலை துணி ரகங்களை தேர்வு செய்யும் போது நிச்சயம் அந்த ஆடையை நேர்த்தியாக கொண்டு வர இயலாது. அதனால் ரீ-கிரியேட் ஐடியாவை திருமண ஆடைகளில் முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. நிச்சயம் ரீ கிரியேட் செய்ய வேண்டும் என்று விரும்பினால் மெட்டீரியலில் தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மேலும் உங்களின் திருமண நாளில் நீங்கள் இன்னொருவர் போல ஆடை அணியாமல் உங்கள் உடல் வாகு, நீங்கள் விரும்பும் நிறம், டிசைனில் ஆடைகளை தேர்வு செய்தால் அந்த நாள் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் தானே...!

திருமண ஆடைகளை திருமணத்திற்கு 25 நாள்களுக்கு முன்பாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் நேர்த்தியாக, உங்களுக்கு பிடித்தாற் போல் வடிவமைக்க முடியும். ஆடையின் நேர்த்தியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூட மீண்டும் ஆல்ட்டர் செய்ய நேரம் இருக்கும். திருமண செலவில் உங்களுடைய ஆடைகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது, உங்களின் இணையின் ஆடைகளுக்கான பட்ஜெட் என்ன என்பதை முதலில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பட்ஜெட்டிற்கு தகுந்தாற் போல் டிசைனர்கள் தேர்வு செய்யலாம். டிசைனர்களிடம் கொடுத்து ஆடைகளை வடிவமைக்க போதுமான பட்ஜெட் இல்லையெனில் ஆலோசனைகளை மட்டும் பெற்று, நீங்கள் வழக்கமாக துணி எடுக்கும் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். கூடுதலாக பிளவுஸ் டிசைன், பேட்டர்ன் போன்றவற்றை ஆலோசனை செய்து கொள்ளலாம்.

பிளவுஸ் மற்றும் ஆண்களுக்கான ஷர்ட் போன்றவற்றை தைக்க தையல்காரர்களிடம்  கொடுக்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு ஆடையை கொடுத்து தைத்துப்பார்க்கலாம். ஃபிட்டிங் சரியாக இருக்கிறது எனில் மட்டும் அவரிடம் திருமண ஆடைகளை கொடுக்கலாம். 

ஆண்களின் திருமண ஆடையை விட, பெண்களின் திருமண ஆடைகள், பிளவுஸ் போன்றவை விலை அதிகமாகவே இருக்கிறது. அதனால் பட்ஜெட்டில் 60 சதவிகிதம் மணப்பெண்ணுக்கு என்றும் 40 சதவிகிதம் மணமகனுக்கு என்றும் பிரித்துக்கொள்ளலாம். பட்ஜெட் பற்றி கவலை இல்லை என்பவர்கள் மனதிற்கு பிடித்த ஆடையை பிடித்த விலையில் வாங்கிக்கொள்ளலாம். 

பட்ஜெட் பிளானிங்

திருமணம் சார்ந்து மெஹெந்தி, நிச்சயதார்த்தம், ரிசப்ஷன், முகூர்த்தம், போட்டோ ஷூட், தேன் நிலவு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால் முகூர்த்த ஆடைகளுக்கு 40 சதவிகிதம், ரிசப்ஷன் ஆடைகளுக்கு 30 சதவிகிதம், மெஹந்தி மற்றும் தேன் நிலவிற்கு 30 சதவிகிதமும் ஒதுக்கலாம். தனியாக போட்டோ ஷூட் செய்ய இருக்கிறீர்கள் எனில் ரென்ட்டல் ஆடைகள் சிறந்த தேர்வாக இருக்கும்.

ரென்ட்டல் ஆடைகள் வாங்கும் போது எங்கு போட்டோ ஷூட் செய்ய இருக்கிறீர்கள், நீங்கள் போட்டோ ஷூட் செய்யும் இடத்திற்கு எந்த ரக ஆடைகள் பொருத்தமாக இருக்கும், உங்களுக்கு எந்த ஆடை வசதியாக இருக்கும் என்பதில் கவனமாக இருங்கள். ரென்ட்டல் ஆடைகள் வாங்கும் போது நேரில் சென்று ஃபிட் செக் செய்து வாங்குவது நல்லது. மணிக்கணக்கில் ஆடைகளை வாடகைக்கு எடுக்காமல், நாள் கணக்கில் எடுத்தால் பதட்டம் இல்லாமல் போட்டோ ஷூட் செய்ய வசதியாக இருக்கும். 


திருமண ஷாப்பிங் செல்லும்போதே மணப்பெண், மணமகன், உறவினர்கள் என தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கி, என்ன வாங்க வேண்டும் என்பதையும் செக் லிஸ்ட் போட்டுக்கொள்வது நல்லது. அவரவரின் பட்ஜெட்டை வெளிப்படையாக சொல்லிவிடுவது  பட்ஜெட் சார்ந்த பதட்டத்தைக் குறைக்கும். என்னதான் நாம் பட்ஜெட் போட்டிருந்தாலும் பட்ஜெட் தொகையை விட செலவு அதிகமாவது இயல்பு தான். ஆனால், அந்த தொகை சில ஆயிரங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவும். 

எந்த ஆடைகள் வாங்கினாலும் அதற்கேற்ற உள்ளாடைகள் சேர்த்து வாங்கிவிடுங்கள். உள்ளாடைகள் தவிர்த்து ஒரு ஆடையை பயன்படுத்த தேவையான அவசியமானவற்றையும் சேர்த்தே வாங்கிவிடுங்கள். உதாரணமாக ஸ்கர்ட் வாங்கும்போதே ஸ்கர்ட் அணிய தேவையான கேன்கேனையும் சேர்த்து வாங்குங்கள். புடவை வாங்கும் போது ஷேப் வியர் போன்றவற்றை முன்பே வாங்கிவிடுவது நல்லது.

தம்பதியினர் இருவரும் மேட்சிங்கான ஆடை அணிவது தற்போது ட்ரெண்டில் இருக்கிறது. தம்பதியினர் ஒரே ஸ்கின் டோனில் இருந்தால் பிரச்னை இல்லை. வெவ்வேறு ஸ்கின் டோனில் இருந்தால் யாரேனும் ஒருவருக்கு அந்த நிற ஆடை டல்லாகவோ அல்லது மிகவும் பளிச்சென்றோ இருக்கும். ஒரே நிற ஆடை அணிவதை விட கான்ட்ராஸ்ட் நிறங்களில் ஆடை அணியும் போது அட்டகாசமாக இருக்கும். புகைப்படங்களிலும் அழகாக காட்டும். உதாரணமாக உங்கள் இணை பிங்க் நிறம் தேர்வு செய்கிறார் எனில் நீங்கள் வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களை தேர்வு செய்யலாம்.

ஆடைகள்

முகூர்த்தம், ரிசப்ஷன்,மெஹந்தி என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உங்களின் ஆடை என்ன, உங்கள் இணையின் ஆடை என்ன என்பதை முதலிலேயே  திட்டமிட்டுக் கொள்ளுங்கள். என்ன ஆடை, என்ன நிறம் என்பதை முன்பே பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

பெண்கள் மெஹெந்தி நிகழ்ச்சிக்கு பனாரஸி ஸ்கர்ட்டை டிசைனர் கிராப் டாப்புடன் மேட்ச் செய்து அணியலாம். முகூர்த்தத்திற்கு பட்டுப் புடவை, ரிசப்ஷனுக்கு கிராண்ட் ஸ்கர்ட் அண்ட் கிராப்டாப் என்று டிரெடிஷனல் மற்றும் இண்டோ வெஸ்டர்ன் கலந்து ஸ்டைலிங் செய்து கொள்ளலாம். பட்டுப்புடவையை பொறுத்தவரை, அதிக ஜரிகை இருக்கும் புடவையை விட, ஜரிகை குறைந்த அளவில் இருக்கும் புடவையில்தான் புடவையின் நிறம் நன்றாகத் தெரியும்.

நீங்கள் தேர்வு செய்யும் ஆடையில் ரகத்திற்கு ஏற்பவே உங்களின் இணையின் ஆடையும் இருக்கவேண்டும். உதாரணமாக, மெஹந்தி நிகழ்ச்சிக்கு நீங்கள் ஸ்கர்ட் பயன்படுத்த இருக்கிறீர்கள் எனில் உங்கள் இணை ஃபார்மல் ஆடை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. பைஜாமா செட் அணிவது நல்லது. முகூர்த்ததிற்கு பட்டுப்புடவை எனில் பட்டு வேஷ்டி அணியலாம். ரிசப்ஷனிற்கு லெஹெங்கா எனில் ஷெர்வானி, பிளேசர் போன்றவை அணியலாம்.  ரிசப்ஷனிற்கு நீங்கள் ஃபேன்சி புடவைகள் எனில் ஃபார்மல் ஆடைகள் பொருத்தமாக இருக்கும். ஆடையின் நிறத்தை ஃபிக்ஸ் செய்த பிறகு மேடையின் நிறத்தை, அலங்காரங்களை தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆடையின் நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மேடை அலங்காரம் இருந்தால் புகைப்படங்களுக்கு சிறப்பாக இருக்கும். 

திருமண ஆடைகளில் கவனம்:

திருமண ஷாப்பிங் முடிந்த பின் ஆடைகளை அக்கம், பக்கத்தில் யாரிடம் காட்டினாலும் ஒரு கவரில் வைத்துக்காட்டுவது  நல்லது. ஆடைகள் கறை, அழுக்குப்படுவதை தவிர்க்கலாம்.
 திருமண மண்டபத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய ஆடைகள், அணிகலன்களை செக் லிஸ்ட் போட்டு முன்பே  பேக் செய்வது நல்லது.

ஆடைகளுக்கு பொருத்தமான காலணிகள், ஆபரணங்களையும் முன்பே தேர்வு செய்து கொள்ளுங்கள். 

திருமணத்திற்காக எடையைக் குறைப்பவர்கள், திருமண ஆடைக்கு அளவு கொடுத்தப்பின் எடைக்குறைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் திருமண ஆடை சரியான ஃபிட்டிங்கில்  இருக்காது. திருமண ஆடை தயாரானதும் ட்ரையல் பார்த்து, தேவைப்பட்டால் ஃபிட்டிங்கை ஆல்டர் செய்துகொள்ள வேண்டும். பரவாயில்லை மேனேஜ் செய்து கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. பின் திருமண நாளில் ஆடை  உங்களுக்கு அசௌகரியத்தையும், பதற்றத்தையும் தரும். 

Wedding(Representational image)

திருமண ஆடைகளை கூடுமானவரை நேரில் சென்று வாங்குங்கள்.

பெண்கள் ஆடையின் நிறத்திற்கு ஏற்ற அணிகலன்கள், மேக்கப் போன்றவற்றை திருமணத்திற்கு 20 நாள்களுக்கு முன்பாவது தேர்வு செய்து விடுங்கள். உங்களுடைய பிளவுஸ்களில் ’பேட் (Pad)' வேண்டுமா, வேண்டாமா  என்பதை ஆடைகளுக்கு அளவு கொடுக்கும் போதே டிசைனர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது. ஆண்கள் பொறுத்தவரை பிளேசர் ரெடிமேட்டில் வாங்குகிறீர்கள் என்றால் வாங்கும் போதே பிட் செக் செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ற ஷர்ட், பேன்ட் போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்வதில் கவனாக இருங்கள். ஷெர்வானிக்கு அணியும் அதே காலணியை, வேஷ்டி, பிளேசர் என எல்லா வகையான ஆடைகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலணிகளை தேர்வு செய்யுங்கள். திருமணத்திற்கு 5 நாள்களுக்கு முன்பே ஹேர் கேட், டிரிம்மிங் போன்றவற்றை செய்துகொள்ளுங்கள். புதுவகையான ஹேர்கட், பியர்ட் வகைகளை திருமணத்தின் போது தவிர்ப்பது நல்லது. 

மணப்பெண், மணமகன் யாராக இருந்தாலும் நீங்கள் அணியும் ஆடையை சரியாக கையாள தெரிந்து வைத்துக்கொள்வது உங்களை இன்னும் அழகாக நேர்த்தியாக காட்டும்.

உங்களின் திருமண நாள் ஜொலிக்கட்டும்...

ஆல் தி பெஸ்ட்!”

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

``அந்த நாளும், மகிழ்ச்சியும்... அப்படியே இருந்திருக்கலாம்'' - குடும்ப தலைவியின் பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்...' - 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டா... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க