Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ.தீவுகள் அபார வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 206 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மிக்கில் லூயிஸ் 97 ரன்களும், அலிக் அதனாஸ் 90 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹாசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேக்கர் அலி 53 ரன்களும், மோமினுல் ஹேக் 50 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கீமர் ரோச் மற்றும் ஷமர் ஜோசப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 152 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசத்துக்கு 334 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அலிக் அதனாஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமர் ரோச் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சோகமாக இருக்கிறது, மீண்டும் ஒன்றிணைவோம்; ரிஷப் பந்த் குறித்து தில்லி கேபிடல்ஸ் உரிமையாளர்!
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.