Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட க...
மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன?
அதிருப்தியில் சரத்பவார்..
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெறும் 10 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் தோல்வியால் சரத்பவார் மிகவும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார்.
சுயேச்சைகளின் சின்னங்கள்
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும்போதே சுயேச்சைகளுக்கு தங்களது கட்சியை ஒத்த சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. ஆனால், அதனை கேட்காமல் சுயேச்சைகளுக்கு சரத்பவாரின் சின்னத்தை ஒத்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதனால் தேர்தலில் சரத்பவார் கட்சி வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறுகின்றனர். மக்களவைத் தேர்தலிலும் இது போன்ற குழப்பம் ஏற்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 9 தொகுதியில் சின்னம் குழப்பத்தால் சரத்பவார் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.
ஒரே பெயரில் இரு வேட்பாளர்கள்..
அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் திலிப் வல்சே பாட்டீல் வெறும் 1523 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். இங்கு போட்டியிட்ட சரத்பவார் கட்சி வேட்பாளர் தேவ்தத் நிகம் பெயரில் மற்றொரு வேட்பாளரும் போட்டியிட்டார். அதோடு சரத்பவார் கட்சி சின்னத்தை போன்ற ஒரு சின்னத்தை சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கினர். அந்த சுயேச்சை வேட்பாளர் 2965 வாக்குகள் பெற்றுள்ளார். ஜல்னா மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேஷ் தோபே 2309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவருடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.
சின்னம் குளறுபடியால்...
இங்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு சரத்பவார் கட்சிக்கு இருப்பது போன்ற சின்னத்தை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஒதுக்கி இருந்தனர்.
இது குறித்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனிஷ் கவாண்டே கூறுகையில், ''சின்னம் குளறுபடியால் எங்களது வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் தோல்வியை சந்தித்தனர். சுயேச்சைகளுக்கு எங்களது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தை ஒதுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் நிராகரித்துவிட்டனர். மீண்டும் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைப்போம்'' என்றார்.
9 தொகுதியில் குளறுபடி...
சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் போட்டியிட்ட தொகுதியிலும் ரோஹித்பவார் பெயரில் ஒரு வேட்பாளர் போட்டியிட்டார். அவருக்கும் சரத்பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போன்ற ஒரு சின்னத்தை ஒதுக்கியிருந்தனர். இதனால் சரத்பவார் கட்சி வேட்பாளர் ரோஹித் பவார் 1243 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் சுயேச்சை வேட்பாளர் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று இருந்தார். இது போன்று 9 தொகுதியில் சரத்பவார் வேட்பாளர்கள் சின்னம் குளறுபடியால் தோல்வி அடைந்துள்ளனர்.
'ஓட்டு வங்கி அரசியலை நிராகரித்துள்ளனர்' - பா.ஜ.க
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் 38 தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருந்தனர். இத்தேர்தலில் அவர்கள் வாக்குகளும் பிரிந்துள்ளது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. வாக்குகள் பிரிந்ததால் காங்கிரஸ் அதிக இழப்பை சந்தித்தது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 38 தொகுதியில் கடந்த முறை 11 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் அது 5 ஆக குறைந்துவிட்டது. இதே போன்று உத்தவ் தாக்கரேயிக்கு இப்பகுதியில் 6 தொகுதிகளும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் கிடைத்திருக்கிறது.
சிவசேனா(ஷிண்டே)விற்கு 6 தொகுதிகளும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளும் கிடைத்திருக்கிறது. முஸ்லிம் தலைவர்களாக நவாப் மாலிக், நசீம் கான், சீசான் சித்திக் போன்றவர்கள் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் தோல்வியை தழுவி இருக்கின்றனர்.
பா.ஜ.கவின் ஓட்டு ஜிகாத் வியூகம் பெரிய அளவில் எடுபட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றன. ஆனால் இதை மறுத்துள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர் வினய், மக்கள் எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலை நிராகரித்துள்ளனர். வளர்ச்சிக்காக ஒன்றுபட்டுள்ளனர் என்றார்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாலேகாவ் மத்திய தொகுதியில் ஒவைசி கட்சி வேட்பாளர் முப்தி இஸ்மாயில் வெறும் 612 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...