புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்
சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!
கனமழை எதிரொலியாக சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் கனமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்க்கண்ட ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
1. அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்
2. அண்ணாநகர் டவர் பூங்கா பாலகம்
3. மாதவரம் பால்பண்ணை பாலகம்
4. வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்
5. வசந்தம் காலனி பாலகம், அண்ணாநகர் கிழக்கு
6. சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்
7. விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
8. சி.பி. இராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்
எதிர்வரும் கனமழையை கருத்தில்கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெற மேற்கண்ட அனைத்து பாலகங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆவின் பால் பவுடர் மற்றும் யுஹெச்டி பால் ஆவின் பாலகங்களில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமா? பரிந்துரையே வரவில்லை! - மத்திய அரசு
சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் யுஹெச்டி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.