கனமழை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆய்வுக் கூட்டம்!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இது நாளை(நவ. 27) புயலாக வலுப்பெறுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர், அடுத்த 2 நாள்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமா? பரிந்துரையே வரவில்லை! - மத்திய அரசு
தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.