நாடு முழுவதும் பரவும் `மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் - தமிழ்நாடு மாடலின் வெற்றியா?
தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அடுத்தடுத்து பல்வேறு மாநில அரசுகளாலும் வெவ்வேறு பெயர்களில் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றியிருப்பதாக அறுதியிட்டுக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழ்நாடு போட்ட விதை!
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை' கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தது தி.மு.க. அதன்பிறகு, தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சிக்கு இரண்டாண்டுகளாகியும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, தகுதிவாய்ந்த குடும்பப் பெண்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரால் `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' அமல்படுத்தப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``இந்தத் திட்டமானது,`குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்; மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்" என்று புகழாரம் சூட்டினார்.
அந்த வகையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே என்ற அடிப்படையில் 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்து தகுதிபடைத்தவர்களாக இருப்பர் என்று அறிவிக்கப்பட்டது. முக்கியமாக, இந்தப் பெண்களுக்கான பொருளாதாரத் தகுதிகளாக, `ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருக்க வேண்டும், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களாக இருக்க வேண்டும்' உள்ளிட்ட விதிகளும் வகுப்பட்டன. அப்படி தகுதி பெற்ற சுமார் 1.16 கோடி குடும்பப் பெண்கள் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40-40 இடங்களிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதுக்கு இந்தத் திட்டமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
பிற மாநிலங்களிலும் விரிவடைந்த முன்னோடித் திட்டம்:
`மகளிர் உரிமைத் தொகை' திட்டத்துக்கு தமிழ்நாட்டு குடும்பப் பெண்களிடம் கிடைத்த ஏகோபித்த ஆதரவும் வரவேற்பும் இந்தத் திட்டத்தின் சிறப்பை எல்லை கடந்து வெளி மாநிலங்களுக்கும் கொண்டுசென்றது. கர்நாடகாவில் நாங்கள் ஆட்சியமைத்தால் மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்த காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அதன்பிறகு, `க்ருஹ லட்சுமி' என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகிறது கர்நாடக அரசு. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கானா தேர்தலிலும் இதேபோன்ற வாக்குறுதியை `நாங்கள் வென்றால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 ரூபாய் கொடுப்போம்' என்று அறிவித்தது காங்கிரஸ். அதேபோல, தெலுங்கானாவிலும் வெற்றிபெற்றது.
தேர்தல் வாக்குறுதியின் கதாநாயகியாக மாறியத் திட்டம்:
அந்தவகையில், சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.கவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி ஆட்சி நடத்திவரும் மகாராஷ்டிராவில் இந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கியது மகாராஷ்டிரா அரசு. தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியிலும், மகளிர் உதவித்தொகையை மாதத்துக்கு ரூ.2,100 ரூபாயாக அதிகரிக்கப்போம் என்று அறிவித்தது பா.ஜ.க கூட்டணி. அதன் விளைவாக தற்போதைய தேர்தலில் மீண்டும் பாஜக-சிவசேனா(ஷிண்டே) கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், ``எங்கள் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் `சம்மான் யோஜனா' திட்டத்தின் கீழ், குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று தேர்தல் வாக்குறுதியளித்தார். அதேபோல, மீண்டும் ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன், ``மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1500 கொடுக்கிறது, அங்குள்ள பா.ஜ.க கூட்டணி அரசு. அதன் காரணமாகத்தான், இந்தத் தேர்தலில் பெண்கள் பெரும்பான்மையாக வந்து வாக்களித்தார்கள். உ.பி-யில் 2014-ம் ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் கொடுத்ததால், கணவர்களின் பேச்சையும் மீறி முஸ்லிம் பெண்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததைப்போல, மகாராஷ்டிராவில் இந்த முறை பா.ஜ.க-வுக்குப் பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள்" என்றிருக்கிறார்.
அதேபோல, தி.மு.க இளைஞரணி தலைவரும், தமிழ்நாட்டின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், ``பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக செயல்படுத்தப்பட்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 1.16 கோடி பெண்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. மேலும், இந்த திட்டத்தில் விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கயும் நடவடிக்கை எடுக்கப்படும்!" என்று தெரிவித்திருக்கிறார்.
மதிய உணவுத்திட்டம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணிணி வரிசையில் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் தமிழ்நாடு மாடலிலிருந்து தோன்றிய இந்தியாவின் முன்னோடித் திட்டமாக அமைந்திருக்கிறது.