IPL 2025: 'மிஸ் ஆகும் ஹார்ட் ஹிட்டர்; பயமுறுத்தாத வேகப்பந்து வீச்சாளர்கள்! - CSK Full Squad Analysis
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டு நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. சென்னை அணி தங்களின் கையில் இருந்த 55 கோடியை வைத்துக் கொண்டு 20 வீரர்களை ஏலத்தில் வாங்கியிருக்கிறது. இப்போது மொத்தமாக சென்னை அணியில் 25 வீரர்கள் இருக்கிறார்கள். இந்த சென்னை அணியின் பலம் பலவீனம் என்ன?
ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, சிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, அஷ்வின், கலீல் அஹமது, நூர் அஹமது, விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, சாம் கரண், ஷேக் ரஷீத், அன்ஷூல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜப்னீத் சிங், நேதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஸ்ரேயாஷ் கோபால், வான்ஸ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்
ஏலத்தில் சென்னை அணி முதல் ஆளாக டெவான் கான்வேயை வாங்கிதான் தொடங்கியது. அங்கேயே சென்னை பாதி வெற்றியை பெற்றுவிட்டது. ஒரு வெளிநாட்டு பேட்டர் + ஒரு இந்திய பேட்டர் என்றுதான் சென்னை அணி தங்களின் ஒப்பனிங் கூட்டணியை கட்டமைக்கும். ஹேடன், ஹஸ்ஸி, ஸ்மித், மெக்கல்லம், டூப்ளெஸ்சிஸ் என வெற்றிகரமான வெளிநாட்டு ஓப்பனர்கள் சென்னை அணியில் இருந்திருக்கின்றன. சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றதிலும் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்த பாரம்பரியம் விட்டுபோகாதபடிக்கு சென்னை அணிக்கு கிடைத்தவர்தான் கான்வே. 2023 சீசனில் ருத்துராஜோடு இறங்கி 672 ரன்களை அடித்திருந்தார். அந்த சீசனில் சென்னையின் வெற்றிக்கு முழுமுதற் காரணமாக இருந்தார்.
கடந்த சீசனில் காயம் காரணமாக பாதி சீசனில் ஆடவில்லையென்றாலும் சென்னை அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் அவரை பஞ்சாபோடு போட்டி போட்டு வாங்கி வந்தது. இதன் மூலம் தங்களின் சக்சஸ் பார்முலாவின் முதல் ஸ்டெப்பை சென்னை வெற்றிகரமாக எழுதியிருந்தது. இந்திய மைதானங்களில் சிறப்பாக ஆடி வரும் ரச்சின் ரவீந்திராவை மீண்டும் சென்னை அணிக்கே கொண்டு வந்திருக்கிறார்கள். வருங்காலத்திற்கான ஆப்சனாகவும் பார்க்கையில் ரச்சின் ரவீந்திரா மிக நல்ல தேர்வுதான். அதேமாதிரிதான் ராகுல் திரிபாதியுமே. ஸ்டார் வேல்யூ இல்லாவிடிலும் நம்பர் 3 பொசிஷனில் அம்பத்தி ராயுடு, ரஹாபே போன்றோர் செய்த வேலையை ராகுல் திரிபாதியால் நிறைவாக செய்து கொடுக்க முடியும். இதே இடத்துக்கான இன்னொரு போட்டியாளராக தீபக் ஹூடாவை எடுத்திருக்கிறார்கள்.
ஒரு சில போட்டிகளை தவிர ஐ.பி.எல் இல் பெரிதாக ஜொலித்தவர் இல்லையென்றாலும் நல்ல திறமையாளர் என்பதால் சென்னை நம்பி வாய்ப்பு கொடுக்கும்பட்சத்தில் பிரகாசிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆங்காங்கே ஒரு சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியதை தவிர விஜய் சங்கர் ஐ.பி.எல் இல் ஒன்றுமே செய்ததில்லை. ஆனால், இதுவரை மற்ற அணிகளுக்காக ஆடியவர் இந்த முறை சேப்பாக்கம் வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் சிறப்பான செயல்பாட்டை கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
தோனி, ஜடேஜா, சாம் கரண் போன்றோர் கீழ் வரிசை அணிக்கானதை செய்து கொடுப்பார்கள். பேட்டிங் ஆர்டர் பார்ப்பதற்கு வலுவாக தெரிந்தாலும் நவீன டி20 போட்டிகளின் போக்கை உணர்ந்து ட்ரெண்டிங்காக ஆடும் ஹார்ட் ஹிட்டிங் வீரர்கள் இல்லாதது சென்னை அணியின் மிகப்பெரிய குறை. லிவிங்க்ஸ்டன், மேக்ஸ்வெல் மாதிரியான வீரர்களுக்கு சென்னை அணியும் கடுமையாக முயன்று பார்த்தது. ஆனால், தங்களின் கணக்கை மீறி அவர்கள் சென்றதால் எடுக்காமல் விட்டனர்.
பௌலிங் யூனிட்டையும் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரண்டாக பிரித்தால் ஸ்பின்னர்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. ஏற்கனவே அணிக்குள் ஜடேஜா இருக்கிறார். ஏலத்தில் அஷ்வினையும் நூர் அஹமதுவையும் வாங்கி வந்திருக்கிறார்கள். சேப்பாக்கத்தில் நடக்கப் போகும் 7 போட்டிகளிலும் அஷ்வின் மிக முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார். சேப்பாக்கத்தை தாண்டி வெளியே செல்கையில் நூர் அஹமது முக்கிய வீரராக இருப்பார். மிடில் ஓவர்களில் ரன்களை மட்டும் கட்டுப்படுத்தாமல் அட்டாக்கிங்காக வீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அந்த விஷயத்தில்தான் கடந்த நாங்கள் சறுக்கினோம். இந்த முறை நூர் அஹமதுவை அதற்காகத்தான் எடுத்திருக்கிறோம் என பயிற்சியாளர் ப்ளெம்மிங் விளக்கம் அளித்திருக்கிறார். ஆக, நூர் அஹமதுவை 10 கோடிக்கு சென்னை அணி காரணமாகத்தான் எடுத்திருக்கிறது.
வேகப்பந்து வீச்சில்தான் சென்னை அணி இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பதிரானா ஏற்கனவே அணியில் இருக்கிறார். கலீல் அஹமதுவை எடுத்து வந்திருக்கிறார்கள். இருவருமே நல்ல பௌலர்கள்தான். ஆனால், அடிக்கடி காயத்தில் சிக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு பேக் அப்பாக சில அபாயமான பௌலர்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், குர்ஜப்னீத் சிங், கமலேஷ் நாகர்கோட்டி என அனுபவமில்லாத பௌலர்கள்தான் அணியில் இருக்கிறார்கள். மேலும், பதிரனாவை தாண்டி ஒரு அபாயகரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரையும் சென்னை எடுத்திருக்க வேண்டும். நேதன் எல்லிஸை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஐ.பி.எல் இல் அவரின் ரெக்கார்டுகள் பெரிதாக இல்லை. இந்த இரண்டு விதமான வீரர்களுக்குமே சென்னை அணி ஏலத்தில் முயன்றது. ஆனால், அஷ்வினுக்கும் நூர் அஹமதுவுக்கும் அதிக தொகையை கொடுத்துவிட்டதால் சென்னை அணி இந்த வீரர்களுக்கு பெரிதாக செலவளிக்க முடியவில்லை.
டிரெண்டிங்கான ஹார்ட் ஹிட்டர்கள் + பதிரனாவை தாண்டி அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள். இது இரண்டும்தான் ஏலத்தில் சென்னை அணியின் மிகப்பெரிய மிஸ்.
உத்தேச சென்னை அணி (இம்பாக்ட் ப்ளேயரோடு)
ருத்துராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, திரிபாதி, சிவம் துபே, விஜய் சங்கர், சாம் கரண், ஜடேஜா, தோனி, அஷ்வின், நூர் அஹமது, பதிரனா, கலீல் அஹமது.
சென்னை அணியைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...