SENSEX, NIFTY-யிலிருந்து நீக்கப்படும் பங்குகள் ஏன், என்ன காரணம்? | IPS FINANCE |...
IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த அல்லா கஷன்ஃபர்?
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் ஸ்பின்னர்கள் செட்டில் வந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி 4.80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. யார் இந்த அல்லா கஷன்ஃபர்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல ஸ்பின்னர் வேண்டும் என்பது மிகப்பெரிய தேவையாக இருந்தது. அந்தத் தேவையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஸ்பின்னர்கள் செட்டிலிருந்து அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி வாங்கியிருக்கிறது. அவரின் அடிப்படை விலை 75 லட்சம்தான். ஆனால், கொல்கத்தா மும்பையும் இவர் மீது ஒரு சேர ஆர்வம் காட்டி இவரின் விலையே ஏற்றினர். 4 கோடியை தாண்டும் போதுதான் கொல்கத்தா அணி கொஞ்சம் சுதாரித்தது. ஏனெனில், அந்த சமயத்தில் அவர்களின் கையில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்தான் இருந்தது. அதுபோக அணியிலும் 14 வீரர்களை மட்டுமேதான் வைத்திருந்தனர். குறைந்தபட்சமாக இன்னும் 4 வீரர்களை அவர்கள் எடுக்க வேண்டும் என்பதால் கொல்கத்தா ரேஸிலிருந்து பின் வாங்கியது. மும்பை அணி 4.80 கோடிக்கு அல்லா கஷன்ஃபரை வாங்கியது.
கடந்த மார்ச் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில்தான் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகியிருந்தார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சமீபத்தில் நடந்த Emerging Asia Cup தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வென்றிருந்தது. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். வலதுகை மிஸ்டரி ஸ்பின்னரான இவர் உலகெங்கும் நடக்கும் லீக் போட்டிகளிலும் ஆடி வருகிறார். 16 டி20 போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி ரேட் 6 க்கும் கீழாக இருக்கிறது. கடந்த ஆண்டில் கொல்கத்தாவின் முஜீபிர் ரஹ்மான் காயம் காரணமாக விலக, அவருக்குப் பதில் அல்லா மாற்று வீரராக வாங்கப்பட்டிருந்தார். ஆனால், எந்தப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
அல்லா கஷன்ஃபரின் திறமையை உணர்ந்ததால்தான் மும்பை அணி கொல்கத்தாவுடன் சண்டையிட்டு அல்லா கஷன்ஃபரை அள்ளி வந்திருக்கிறது.