'அரிசன் காலனி' பெயரை அழித்த அன்பில் மகேஷ்!
நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
”நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொன்னாடை அணிவித்தார்.
இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.